இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி: கிரிக்கெட் போட்டிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப்.26) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப்.26) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இலங்கையில்  8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 359 பேர் இறந்தனர். ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு உலக நாடுகளை அதிர வைத்தது.
 இச் சம்பவத்தின் விளைவாக, இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை-இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் ஆகியவை தீவிர ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.  சென்னையில் இலங்கை தூதரகம், புத்தமடம், கிறிஸ்தவ தேவாலயங்கள்,நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: இந்த நிலையில், சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் மோதுகின்றன. இலங்கை குண்டு வெடிப்பின் எதிரொலியாகவும், இப் போட்டியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் வழக்கத்தை விட கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக மைதானத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 20 உதவி ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள் உள்பட ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.  போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரால் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மைதானத்தை சுற்றிலும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க, இரு இணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 300 போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com