இலங்கையில் குண்டு வைத்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல்
By DIN | Published On : 26th April 2019 04:34 AM | Last Updated : 26th April 2019 04:37 AM | அ+அ அ- |

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வியாழக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், இலங்கையில் நான் தான் குண்டு வைத்து வெடிக்கச் செய்தேன், அதேபோல கோயம்பேடு மேட்டுக்குப்பத்திலும் குண்டு வைத்துள்ளேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதைக் கேட்ட போலீஸார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் விசாரணை செய்யப்பட்டது. இதில், விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த மைக்கேல் ப்ரீடி (43) என்பவர் மதுபோதையில் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக மைக்கேலை தேடி வருகின்றனர்.