பட்டப் படிப்புடன் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அவசியம்: அமைச்சர் நிலோபர் கபீல்

பட்டப் படிப்புடன் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் மாணவர்கள் மேற்கொள்வது அவசியம் என தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.

பட்டப் படிப்புடன் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் மாணவர்கள் மேற்கொள்வது அவசியம் என தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் நிலோபர் கபீல் பேசியது: உயர் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களிடையே வேலைவாய்ப்புத் திறனை வளர்ப்பதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி  வழங்குவது போன்ற நல்ல திட்டங்களையும் அரசு அறிமுகம் செய்துள்ளது. 
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு பல கோடி ரூபாய் நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவும், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வலியுறுத்துகிறது. எனவே, பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஒன்றையும் கற்றுக்கொள்வது மிக அவசியம் என்றார் அவர். 
கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஜோதி வெங்கடேஷ்வரன்: உயர் கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையில் (ஜி.இ.ஆர்.) 45.9 சதவீதத்துடன் இந்திய அளவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 
அதுமட்டுமின்றி, பெண் கல்வியிலும் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. இதற்கு தமிழக அரசு அறிமுகம் செய்து வரும் பல்வேறு திட்டங்களே காரணம். 
இப்போது உயர் கல்வியின் தரத்தை உலகத் தரத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய கல்விக் கொள்கை வரைவை  மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் பல நேர்மறையான கருத்துக்களும், திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. 
ஆனால், இந்த வரைவு குறித்து கருத்துக்களை அனுப்புபவர்கள் அதில் இடம்பெற்றுள்ள சில எதிர்மறையான கருத்துக்களை மட்டும் குறிப்பிடுகின்றனர்.
உயர் கல்வியின் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவது, உயர் கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது, ஆசிரியர் தரத்தை உயர்த்துவது போன்ற பல நல்ல விஷயங்கள் இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com