பள்ளி மாணவர்களுக்கு 20 லட்சம் கணினி நோட்டு வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

நடப்பு ஆண்டில் மத்திய அரசின் அனுமதி பெற்று 8, 9 மற்றும் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "டேப்' என்றழைக்கப்படும் கணினி நோட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

நடப்பு ஆண்டில் மத்திய அரசின் அனுமதி பெற்று 8, 9 மற்றும் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "டேப்' என்றழைக்கப்படும் கணினி நோட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்  26 பள்ளிகளைச் சேர்ந்த 10,336 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா  புனித தெரசாள் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியது:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 14 லட்சத்து 72 ஆயிரம் 
மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப் படவில்லை. 

இதர மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றும் வகையில் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் மட்டுமல்லாமல், இதர போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். 

அனைத்து அரசு பள்ளிகளும் கணினி, இணையதளம் வசதி கொண்ட பள்ளிகளாக மேம்படுத்தப்பட உள்ளன. அன்றாடம் வகுப்பில் நடத்தப்படும் பாடத்தை மாணவர்கள் யூ டியூப்பில் பதிவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் 8, 9 , 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று 20 லட்சம் கணினி நோட்டு (டேப்) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவாற்றல் திறனை தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக மேம்படுத்தும் நடவடிக்கைக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, தென்சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், தாமஸ்மலை முன்னாள் ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன், பம்மல் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் அப்பு வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com