சுடச்சுட

    

    சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப் பணி மார்ச் 2021-க்குள் முடிக்க திட்டம்: அமைச்சர் எம்.சி.சம்பத்

    By DIN  |   Published on : 14th August 2019 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sambath

    சென்னை  வர்த்தக மையத்தின் முன்பதிவு - கட்டணம் செலுத்தும் வசதிகளுடனான புதிய இணையதளத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். 


    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய விரிவாக்கப் பணி அக்டோபரில் தொடங்கி வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
    தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை வர்த்தக மையத்தின் ஆன்லைன் முன்பதிவுடன் புதிய இணைதளம் மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்தும்  வசதி  தொடக்க விழா, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய வசதிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது:
    புதிய இணைதளம் தொடங்கப்பட்டு, இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது வர்த்தக நிறுவனங்களுக்கு  உதவியாக இருக்கும். இந்திய அரசு நிறுவனமும் தமிழக தொழில் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, 51 சதவீதம் மற்றும் 49 சதவீதம் பங்கு என்ற விகிதத்தில் முதலீடு செய்து தமிழக வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் கடந்த 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொழில் மேம்பாடு, வர்த்தக கண்காட்சிகள் நடத்துதல், ஏற்றுமதி ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 
    இந்த நிறுவனத்தால், நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6,160 சதுரமீட்டர் பரப்பளவில் இரண்டு குளிரூட்டப்பட்ட கண்காட்சி அரங்குகளுடன் 2001-ஆம் ஆண்டில் இந்த மையம் தொடங்கப்பட்டது. சென்னை வர்த்தக மையத்தில் 2004-ஆம் ஆண்டில் 2,000 இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்கமும், 2008-ஆம்ஆண்டில்  4,400 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்றாவது குளிரூட்டப்பட்ட கண்காட்சி அரங்கமும் ஏற்படுத்தப்பட்டது.
    தற்போது, சென்னைவர்த்தக மையத்தை விரிவாக்கம் செய்யும் பணி ரூ.255 கோடி மதிப்பீட்டில் நடக்கவுள்ளது. 9.13 ஏக்கர் பரப்ளவில் 20,322 சதுரமீட்டர் அளவு கொண்ட கண்காட்சி அரங்கங்கள், கூட்ட அரங்கு, பல அடுக்கு வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பயன்பாட்டு கட்டடம் போன்ற வசதிகளுடன் மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. மேலும் இந்தப் பணியை, வரும் அக்டோபரில் தொடங்கி  2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
    தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர் என்.முருகானந்தம் பேசியது: தொழிலை எளிதாக தொடங்குவதற்காக நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சி நடந்து வருகிறது.  சுற்றுச்சூழலைப் பேணி காப்பதற்காக  ஒரு கொள்கை வெளியிட்டுள்ளோம். சிப்காட்டில் 21 தொழில் பூங்காக்கள்  உள்ளன. தொழில் பூங்காக்களில் 2.32 லட்சம் மரக்கன்றுகளை  நடுவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இதன் மூலமாக, அனைத்து சிப்காட் வளாகங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் 2.32 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார் அவர்.
    நிகழ்ச்சியில், தமிழக வர்த்தக மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் வி.ஆர்.சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai