சுடச்சுட

  


  சென்னையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
  அப் பெண்ணின் இறப்புக்கு பன்றிக் காய்ச்சல் காரணமில்லை என்று சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.
  இன்ப்ளூயன்ஸா வைரஸ் தாக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு நோய்களால் அவர் அவதிப்பட்டு வந்ததும், திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டதுமே அப்பெண் உயிரிழந்ததற்கு காரணம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
  ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  கடந்த ஆண்டு மட்டும் 1,103 பேர் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
  இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தியாகராய நகர், காந்தி தெருவைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவர், காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  இதையடுத்து, அதற்கான சிகிச்சையும், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பெண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
  திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டதே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என மருத்துவமனை சார்பில் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,  அப்பெண்ணின் இறப்புக்கு பன்றிக் காய்ச்சல் காரணமில்லை என்று சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளனது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai