ஒரேநாளில் 6 சாலை விபத்துகளில் 7 பேர் பலி

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 இடங்களில் நேரிட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர்.


சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 இடங்களில் நேரிட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சே.டில்லிபாபு (31). மிளகாய் மண்டி உரிமையாளரான இவர், தனது நண்பரான புழலைச் சேர்ந்த பொ.ஆனந்த் (42) என்பவருடன்  ஜி.என்.டி. சாலையில் மோட்டார் பைக்கில்  சென்றபோது  பின்னால் வந்த கார் மோதியதில்  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாடி: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). லாரி ஓட்டுநரான இவர், தனது நண்பர் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுடன் (25) மோட்டார் பைக்கில்  பாடி மேம்பாலத்தில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில்  ரமேஷ்   உயிரிழந்தார்.  
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (49). இவர் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, பஜனை கோயில் தெரு சந்திப்பில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு மோட்டார் பைக்  ரவி மீது மோதியது. இதில் காயமடைந்த ரவி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.  பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
காசிமேடு: காசிமேட்டைச் சேர்ந்தவர் பாரதி (30). சமையலறை புகைக்கூண்டு தயாரிக்கும் தொழில் செய்து வந்த பாரதி, காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் தனது மோட்டார் பைக்கில்  சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில்  பாரதி உயிரிழந்தார்.  காசிமேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
போரூர்: போரூர் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் வ.பெருமாள் (58). கட்டடத் தொழிலாளியான இவர், போரூர்-குன்றத்தூர் சாலையில் நடந்து சென்றபோது சுமை ஆட்டோ   மோதியதில்  பெருமாள் உயிரிழந்தார்.  பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, சூளைமேட்டைச் சேர்ந்த அந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் வே.வெங்கடேசனை கைது செய்தனர். இதேபோல, பெரியமேடு ஷாட்டன் நாயக்கன் தெருவில் அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதி,  இளைஞர் வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார்.   யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மதுரவாயல் ஸ்ரீலட்சுமிநகர் கண்ணியம்மன் நகர் பிரதான சாலையில் தனியார் பார்சல் நிறுவனத்தின் கிளை அலுவலகம் நடத்தி வந்தார் இ.சௌந்தரராஜன் (51). இவர் வியாழக்கிழமை அந்த அலுவலகத்தின் படிக்கட்டில் இருந்து வேகமாக கீழே இறங்கியபோது கீழே  விழுந்து உயிரிழந்தார்.  மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com