தாம்பரம் நகராட்சியில் மழைநீர் சேமிப்பு கணக்கெடுப்புப் பணி தீவிரம்

தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 39 வார்டுகளிலும் உள்ள 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பு கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 39 வார்டுகளிலும் உள்ள 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பு கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் அனைத்து அரசு கட்டடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை கட்டடங்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஒரு மாதத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாம்பரம் நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா புதன்கிழமை நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் நகராட்சியின் அனைத்துத் துறை ஊழியர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தாம்பரம் நகராட்சியில் உள்ள அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்து எந்தெந்த கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டடங்களில் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி கண்டிப்பாக அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பணிக்கென 20 நகராட்சி ஊழியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வீடுவீடாகச் சென்று நேரில் ஆய்வு செய்து புள்ளி விவரங்களை தினமும் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மழைநீர் கட்டமைப்பு அமைக்கப்பட்ட கட்டடங்களை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள், வருவாய் துறை ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தாம்பரம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு குறித்த ஆய்வுப்பணி வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 1,270 வீடுகளில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆய்வுக் குழுவினர் மழைநீர் கட்டமைப்பை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்று நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com