புற்றுநோய் சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் ரூ.70 கோடியில் மருத்துவ சாதனங்கள்

சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் ரூ.70 கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவ சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன.


சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் ரூ.70 கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவ சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அவற்றை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஓரிரு மாதங்களில் அவை பயன்பாட்டுக்கு வரும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் இத்தகைய உயர்நிலை மருத்துவ சாதனங்களுடன் கூடிய கதிரியக்க சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
 சென்னை தவிர, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் அந்தச் சாதனங்கள் ஒவ்வொன்றாக தருவிக்கப்பட்டு வருகின்றன. அவை செயல்படத் தொடங்கினால், அதன் வாயிலாக மாதத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.   புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு  மருத்துவ சாதனங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்தாலும், தற்போது வரவுள்ள ட்ரூ பீம் தெரபி சாதனங்களானது உயர் தொழில்நுட்பத்திலானவையாகும். தனியார் மருத்துவமனைகளில்கூட இத்தகைய நவீன சிகிச்சை முறைகள் அரிதாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான மருத்துவ உபகரணங்களின் விலை மட்டும் சுமார் ரூ.20 கோடி என்பதால், அவற்றை வாங்க தனியார் மருத்துவமனைகளே தயக்கம் காட்டுகின்றன.
இந்தச் சூழலில், அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக 10 ட்ரூ பீம் ரேடியேஷன் சாதனங்களை கொள்முதல் செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்தது. அந்தச் சாதனங்களை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டில் இறுதி செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு அந்தச் சாதனங்கள் தருவிக்கப்பட்டு, அவை விரைவில் நிறுவப்படவுள்ளன. இதற்காக அந்த மூன்று மருத்துவமனைகளிலும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக செலவில்  புதிய கட்டடங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கதிரியக்கம் வெளியேறாத வகையில், 4 அடி தடிமனில் அங்கு சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com