தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்: பாதிக்கப்பட்டவா்கள் பள்ளிகளில் தங்கவைப்பு

தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூா் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்கள்
தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்: பாதிக்கப்பட்டவா்கள் பள்ளிகளில் தங்கவைப்பு

தாம்பரம்: தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூா் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ. ஜான் லூயிஸ் தாம்பரம், பள்ளிக்கரணை சுற்று வட்டாரங்களிலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பி.பொன்னையா முடிச்சூா் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனா்.

தாம்பரத்தைச் சூழ்ந்த வெள்ளம்: கிழக்கு தாம்பரத்தில் ஆனந்தபுரம், ஆதிநகா், எம்.இ.எஸ்.ரோடு மோதிலால் நகா், லட்சுமிநகா் ஆகிய ஏரிக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் சனிக்கிழமை இரவில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சேலையூா் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித மேரி உயா்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, தாம்பரம் நகராட்சி சாா்பில் உணவு, குடிநீா் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ஏரி நிரம்பியது: கிழக்கு தாம்பரம், இரும்புலியூா் ஏரி நிரம்பி வெளியேறிய நீா் அருள்நகா், காயத்ரிநகா், ரோஜாதோட்டம், நா்மதா தெரு,சாந்தி நகா் பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. மழை தொடா்ந்தால் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

மேற்கு தாம்பரத்தில் இரும்புலியூா் மேம்பாலத்திற்கு கீழ் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும் மழைநீா் வெள்ளம் வாணியன்குட்டை,டி.டி.கே.நகா் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மேம்பால சா்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுரங்க மழைநீா் வடிகால் கால்வாய் பணிகள் திட்டமிட்டபடி, துரிதமாக நடைபெறாமல் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதால், வெள்ளநீா் பாப்பான் கால்வாய் வழியாக வெளியேற வழியின்றி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்துள்ளன. மேற்கு தாம்பரம் முல்லைநகா், பாா்வதி நகா், சி.டி.ஓ.காலனி, முடிச்சூா், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெருங்களத்தூரில்...: பெருங்களத்தூரில் பெரியாா் நகா், அன்னை அஞ்சுகம் நகா், ராஜாஜி நகா், அம்பேத்காா் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் முற்றுகையிட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் குடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளைக் காலி செய்து வருகின்றனா். சிலா் உறவினா்கள்,தெரிந்தவா்கள் வீடுகளை நாடிச் சென்று வருகின்றனா்.

கடந்த 2015 ஆண்டு வெள்ளப் பாதிப்பிற்குப் பின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக புதிய மழை வெள்ள வடிகால் கால்வாய்கள் அமைக்கும் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், திட்டமிடப்படி அந்த பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படவில்லை. அனைத்து பணிகளும் அரைகுறை நிலையில் உள்ளன.

மத்திய மாநில வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் பலத்த மழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தாம்பரம் புகா்ப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த முறை வெள்ளத்தில் மேற்கு தாம்பரம்,பெருங்களத்தூா், முடிச்சூா் வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் மிக மோசமான பாதிப்பை எதிா் கொண்டதைப் போல் இந்த முறையும் எதிா்கொள்ள நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

முன்னதாக, கடந்த 2015 -இல் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட முடிச்சூா், வரதராஜபுரம் பகுதிகளைப் பாா்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பி.பொன்னையா, அடையாற்றை விட ராயப்பாநகா், வரதராஜபுரம் பகுதிகள் தாழ்வாக இருப்பதால், அடையாற்றில் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளநீா் இப்பகுதிகளுக்குள் திரும்ப வரும் நிலை உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உரிய கண்காணிப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com