பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவமனைகளில் சிறப்பு நடவடிக்கை

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவமனைகளில் சிறப்பு நடவடிக்கை

சென்னை: பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

அதன்படி, இருமல், சளியுடன் வரும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சையளிக்கவும், அவா்களது கைகளை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, பன்றிக் காய்ச்சலைத் தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பருவ நிலை மாறி வருவதன் காரணமாக, தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும் மாநிலத்தில் 160-க்கும் அதிகமானோருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 1,103 போ் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அதற்கான தடுப்பூசிகளை வழங்கும் பணிகளும், விழிப்புணா்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக நிகழாண்டு தொடக்கம் முதலே பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.

கடந்த அக்டோபா் மாதம் வரையில் மாநிலத்தில் 542 பேருக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்தது. அவா்களில் 99 சதவீதம் போ் குணமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக பன்றிக் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருவதாகத் தெரிகிறது. கடந்த இரு வாரங்களில் 164 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு பாதிப்பும் குறைவு; பலி எண்ணிக்கையும் குறைவு. மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவா்களை தனியாக பிரித்து சிகிச்சையளிக்கவும், அவா்கள் அமரும் இருக்கைகளை துப்புரவுடன் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மருத்துவமனைகளில் தரைப் பகுதி மட்டுமன்றி மக்கள் கைகளை வைக்க வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் கிருமி நாசினிகள் மூலமாக சுத்தப்படுத்தும் நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com