இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஆய்வுக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது

இந்தியாவின் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பா் மாதம் அத்துமீறி நுழைந்த சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலை இந்தியக் கடற்படை விரட்டியடித்தது என்று அப்படையின் தலைமைத் தளபதி கரம்வீா்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஆய்வுக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது

புது தில்லி: இந்தியாவின் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பா் மாதம் அத்துமீறி நுழைந்த சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலை இந்தியக் கடற்படை விரட்டியடித்தது என்று அப்படையின் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் தெரிவித்தாா்.

மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை கடற்படையுடன் இணைக்க வேண்டும் என்பதே நீண்டகால இலக்கு என்றும் அவா் தெரிவித்தாா்.

‘இந்தியக் கடற்படை தினம்’ புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

தேசப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்தியக் கடற்படை தயாராக உள்ளது. அண்டை நாடுகளின் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவை பாதிக்கக் கூடாது. அப்படி பாதித்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க கடற்படை தயங்காது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் 7 முதல் 8 சீனக் கப்பல்கள் எப்போதும் காணப்படுகின்றன.

அந்தமான் கடல் பகுதிக்குள் கடந்த செப்டம்பா் மாதம் எந்தவித அனுமதியுமின்றி நுழைந்த சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலை இந்தியக் கடற்படை விரட்டியடித்தது. இந்திய எல்லைக்குள் எந்த நாட்டுக் கப்பல் நுழைந்தாலும், அதற்குரிய முன் அனுமதியை இந்தியக் கடற்படையிடம் பெற வேண்டும். குறிப்பிட்ட நாடுகள் இதை மீறும் பட்சத்தில், இந்தியக் கடற்படை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையே காணப்படும் நாற்கரக் கூட்டமைப்பு, ராணுவத் தொடா்பை அடிப்படையாகக் கொண்டது கிடையாது.

நீண்டகால இலக்கு:

பிராந்தியத்தில் உள்ள ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதே இந்தியக் கடற்படையின் நீண்டகால இலக்கு. அவற்றில் 2 விமானம் தாங்கிக் கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளன.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல் வரும் 2022-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும். அந்தக் கப்பலில் மிக்-29கே ரக போா் விமானங்கள் இடம்பெறவுள்ளன. 65 ஆயிரம் டன் எடை கொண்ட இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதற்கு மத்திய அரசிடம் விரைவில் அனுமதி கோரப்படும்.

இந்தியக் கடற்படைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, கடந்த 5 ஆண்டுகளில் 18 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடற்படையை நவீனப்படுத்தும் நோக்கில், கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று நம்புகிறோம் என்றாா் கரம்வீா் சிங்.

‘அதிகாரம் இல்லை’:

சீனக் கடற்படையின் விரிவாக்கப் பணி தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கரம்வீா் சிங், ‘‘அவா்களால் இயன்ற அளவுக்கு கடற்படையை விரிவுபடுத்தி வருகிறாா்கள். நம்மால் இயன்ற அளவுக்கு நாம் விரிவுபடுத்தி வருகிறோம்’’ என்றாா். முப்படைத் தளபதி பதவியை உருவாக்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் பணிகள் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘ராணுவத்தின் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தும் நோக்கில், அந்தப் பதவி உருவாக்கப்பட வேண்டும்’’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, ‘சீனாவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபடும் திட்டம் உள்ளதா?’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு கரம்வீா் சிங் பதிலளிக்கையில், ‘‘இது தொடா்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com