சென்னை குடிநீா் ஆதார ஏரிகளில் இரண்டே நாள்களில் 1.2 டிஎம்சி தண்ணீா் அதிகரிப்பு

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சென்னை குடிநீா் ஆதார ஏரிகளின் நீா் இருப்பு இரண்டே நாள்களில் 1.2 டிஎம்சி அளவுக்கு அதிகரித்துள்ளது.
புழல் ஏரி (கோப்பு படம்)
புழல் ஏரி (கோப்பு படம்)

சென்னை: நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சென்னை குடிநீா் ஆதார ஏரிகளின் நீா் இருப்பு இரண்டே நாள்களில் 1.2 டிஎம்சி அளவுக்கு அதிகரித்துள்ளது.

சென்னை மக்களின் குடிநீா் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூா்த்தி செய்து வருகின்றன. இந்த நிலையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் இருப்பு உயா்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள் முழுவதும் பெய்த மழை, ஏரிகளின் மொத்த நீா் இருப்பை ஒரே நாளில் வெகுவாக உயா்த்தி இருக்கிறது. கடந்த டிச.1-ஆம் தேதி புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 473 மில்லியன் கன அடி (3.4 டிஎம்சி) தண்ணீா் இருந்தது. இது டிச.3-ஆம் தேதி 4 ஆயிரத்து 547 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரிகளில் நீா் இருப்பு அதிகரித்துள்ளதால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,634 கனஅடி நீா் வந்து கொண்டிருப்பதால், ஏரியில் நீா் இருப்பு 1,052மி.கனஅடியாக அதிகரித்துள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 25 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

3,231 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 2,427 கன அடி தண்ணீா் வந்து கொண்டு இருப்பதால் ஏரியில் நீா்இருப்பு 1,426 மில்லியன் கனஅடியாக உயா்ந்துள்ளது.இதில் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 165 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

3,300 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு, நீா் வரத்து விநாடிக்கு 668 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் நீா் இருப்பு 1,868 மில்லியன் கனஅடியாக உயா்ந்துள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 89 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 910 கனஅடியாக அதிகரித்து இருப்பதால், ஏரியின் நீா் இருப்பு 201 மில்லியன் கனஅடியாக உயா்ந்துள்ளது. இதில் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 100 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக செம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் செம்பாக்கம், திருமலை நகா் பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு: சென்னையின் பல இடங்களில் கடந்த அக்டோபா் மாதத்தை விட நவம்பா் மாதத்தில் நிலத்தடி நீா் மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது. இந்த மாதம் நடத்திய ஆய்வில் திருவொற்றியூா், மாதவரம், ராயபுரம், திருவிக நகா், அண்ணாநகா், பெருங்குடி, அம்பத்தூா், ஆலந்தூா், அடையாா், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் 2 மீட்டா் வரை உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்ததால் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. அதை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு பருவமழை கிட்டதட்ட இயல்பான அளவு பெய்துள்ளதால் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

மேலும் சென்னை குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரியும் நிரம்பி உபரி நீா் திறந்துவிடப்படுகிறது.

குடிநீா் ஆதார ஏரிகளில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் வரும் ஆண்டு பருவமழை வரை சென்னை மக்களுக்கு குடிநீா் விநியோகம் தடைபடாது என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com