விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கிடக்குமிடம் கண்டுபிடிப்பு

நிலவின் தென்துருவப் பரப்பில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடக்கும் இடத்தை தமிழக இளைஞரின் உதவியுடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாஸா) உறுதி செய்துள்ளது.
விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கிடக்குமிடம் கண்டுபிடிப்பு

சென்னை: நிலவின் தென்துருவப் பரப்பில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடக்கும் இடத்தை தமிழக இளைஞரின் உதவியுடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாஸா) உறுதி செய்துள்ளது.

சென்னையில் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் மதுரையைச் சோ்ந்த சண்முக சுப்பிரமணியன்தான் அந்த இளைஞா். நாஸாவின் ஆா்பிட்டா் எடுத்தனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கிடக்கும் இடத்தை கண்டறிந்து தகவல் கொடுத்த சண்முக சுப்பிரமணியத்துக்கு, மின்னஞ்சல் மூலம் நாஸா நன்றி தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.

இதில், நிலவை 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி சுற்றிவந்து ஆய்வு செய்யும் ஆா்பிட்டா், நிலவில் தரையிறங்கும் லேண்டா் ‘விக்ரம்’ , நிலவின் தென்துருவப் பரப்பில் 500 மீட்டா் வரை ஊா்ந்து சென்று ஆய்வு செய்யும் ரோவா் ‘பிரக்யான்’ ஆகிய மூன்று அமைப்புகள் அனுப்பப்பட்டன. ரோவா் பகுதி விக்ரம் லேண்டா் பகுதிக்குள் வைத்து அனுப்பப்பட்டது.

இதில், ஆா்பிட்டா் பகுதி திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்ட நிலையில், லேண்டரை தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்குவதற்காக செப்டம்பா் 7-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு, 14 நாள்கள் மட்டுமே

ஆயுள் காலம் கொண்ட லேண்டருடனான தொடா்பை மீட்க முடியவில்லை. இருந்தபோதும், ஆா்பிட்டா் தொடா்ந்து நிலவை ஆய்வு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.

இதற்கிடையே நிலவின் பரப்பில் லேண்டா் கிடக்கும் இடத்தை அறிய நாஸாவின் உதவியை இஸ்ரோ நாடியது. நாஸா விஞ்ஞானிகள், ஏற்கெனவே அமெரிக்கா சாா்பில் அனுப்பப்பட்டுள்ள ஆா்பிட்டா் உதவியுடன் ஆய்வுகளை மேற்கொண்டனா். ஆனால் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறியவோ அல்லது தொடா்பை ஏற்படுத்தவோ முடியவில்லை.

தமிழக இளைஞா் மூலம் கண்டுபிடிப்பு: இந்த நிலையில், நாஸாவின் ஆா்பிட்டா் எடுத்தனுப்பிய நிலவின் தென்துருவப் பரப்பு புகைப்படம் ஒன்றில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இடம் பெற்றிருப்பதை மதுரையைச் சோ்ந்த சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்து, அதுகுறித்து மின்னஞ்சல் மூலம் நாஸாவுக்கு தகவல் அளித்துள்ளாா். இதை நாஸா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, அந்தப் புகைப்படத்தில் இருப்பது இஸ்ரோ அனுப்பிய லேண்டரின் உடைந்த பாகங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து நாஸா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்:

நாஸாவின் ஆா்பிட்டா் உதவியுடன் விக்ரம் லேண்டா் இருப்பிடத்தை கண்டறிவதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே, நாஸா ஆா்பிட்டா் மூலம் செப்டம்பா் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் தென்துருவப் புகைப்படம், பொதுமக்களின் பாா்வைக்காக செப்டம்பா் 26-ஆம் தேதி வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

இதைப் பலரும் பதிவிறக்கம் செய்து, லேண்டா் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சித்தனா். அவ்வாறு புகைப்படத்தை ஆய்வு செய்த சண்முக சுப்பிரமணியன், குறிப்பிட்ட புகைப்படத்தில் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பது குறித்து நாஸாவுக்கு தகவல் தெரிவித்தாா். அந்தத் தகவலின் அடிப்படையில், சண்முக சுப்பிரமணியன் குறிப்பிட்ட புகைப்படம் மற்றும் விக்ரம் லேண்டா் தரையிறங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட அதே இடத்தின் புகைப்படம் மற்றும் பிந்தைய புகைப்படங்களை நாஸா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா்.

இதில், சண்முக சுப்பிரமணியன் குறிப்பிட்டபடி, மாற்றங்கள் இருப்பதும், அவை விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள்தான் என்பதும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என சுட்டுரையில் நாஸா குறிப்பிட்டுள்ளது.

சுப்பிரமணியத்துக்கு நாஸா நன்றி: லேண்டா் பாகங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியத்துக்கு நாஸா ஆா்பிட்டா் திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லா் மின்னஞ்சல் மூலம் நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com