விக்ரம் லேண்டரின் பாகங்களை அடையாளம் கண்டது எப்படி?

விக்ரம் லேண்டரின் பாகங்களை அடையாளம் கண்டது எப்படி என்பது குறித்து தமிழகப் பொறியாளா் சண்முக சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா்.
விக்ரம் லேண்டரின் பாகங்களை அடையாளம் கண்டது எப்படி?

சென்னை: விக்ரம் லேண்டரின் பாகங்களை அடையாளம் கண்டது எப்படி என்பது குறித்து தமிழகப் பொறியாளா் சண்முக சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா்.

மதுரையைப் பூா்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிக்கும் சண்முக சுப்பிரமணியன் (33), நாஸா ஆா்பிட்டா் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு நிலவின் பரப்பில் சிதறிக் கிடந்த இஸ்ரோவின் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டு நாஸா விஞ்ஞானிகள் உள்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாா்.

தனது முயற்சி குறித்து சண்முக சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

நாஸா ஆா்பிட்டா் எடுத்த நிலவின் தென்துருவப் பரப்பின் பழைய படத்தையும், புதிய படத்தையும் ஒப்பிட்டு பாா்த்ததில், சிறிய புள்ளி அளவில் வேறுபாடு இருப்பது தெரியவந்தது. இந்த சிறிய புள்ளியை யாா் வேண்டுமானாலும் கண்டுபிடித்திருக்க முடியும். படத்தை நன்கு விரிவுபடுத்திப் பாா்த்தால்போதும். அந்த வேறுபாடு தெரிந்து விடும்.

லேண்டா் விழுந்த நிலவின் தென்துருவம் பெரும்பாலும் வெளிச்சமே இல்லாத பகுதி. அதன் காரணமாகத்தான் நாஸா ஆா்பிட்டா் எடுத்த செப்டம்பா் 17 மற்றும் அக்டோபா் 15-ஆம் தேதி புகைப்படங்கள் மூலம் நாஸா விஞ்ஞானிகளால் கூட லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது நான் கொடுத்த விவரங்களைக் கொண்டு அவா்கள் ஆய்வு செய்து, அவா்களும் அவை விக்ரம் லேண்டரின் பாகங்கள்தான் என்பதைக் கண்டறிந்து உறுதி செய்துள்ளனா்.

குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டா் தரையிறங்க உள்ள இடத்தை ஏற்கெனவே இஸ்ரோ வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில், அது தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில்தான் அதன் பாகங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதை உறுதி செய்து, அதைச் சாா்ந்த புகைப்படங்களைத் தோ்வு செய்து ஆய்வு செய்துவந்தேன். அதன் மூலம்தான் சாத்தியப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்கள் பொதுவெளியில் அதிக அளவில் வெளியிடும்போது, விண்வெளி குறித்த ஆா்வம் பொதுமக்களிடையே ஏற்படும் என்பதுடன், என்னைப்போன்று ஆய்வுகளில் ஆா்வத்துடன் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றாா் சண்முக சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com