ரூ.4.40 கோடியில் புதிய குப்பைத் தொட்டிகள்
By DIN | Published On : 05th December 2019 02:57 AM | Last Updated : 05th December 2019 02:57 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 மண்டலங்களில் ரூ. 4.40 கோடி மதிப்பில் புதிய குப்பைத் தொட்டிகள் மற்றும் சக்கரத்துடன் கூடிய புதிய குப்பைத் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 200 கோட்டங்களில் திடக்கழிவு மேலாண்மைத் துறையில் 19,605 தூய்மைப் பணியாளா்கள் மூலம் 4,027 மூன்று சக்கர மிதிவண்டிகள், 206 கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மூலமாக நாள்தோறும் சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், சாலை மற்றும் தெருக்களில் மாநகராட்சி மூலம் 6,748 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், 12 மண்டலங்களில் ரூ. 4.40 கோடி மதிப்பில் புதிய குப்பைத் தொட்டிகள் மற்றும் சக்கரத்துடன் கூடிய குப்பைத் தொட்டிகளை வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
புதிய குப்பைத் தொட்டிகள்: இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகள் கூறியது: 1 முதல் 8-ஆவது மண்டலங்கள் வரையும் 11, 12 மற்றும் 14, 15 வரையும் என மொத்தம் 12 மண்டலங்களில் 6,748 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 6,234 குப்பைத் தொட்டிகள் நல்ல நிலையில் உள்ளன. 514 குப்பைத் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. இதனால், 1 முதல் 8-ஆவது மண்டலங்கள் வரையும் 11, 12 மற்றும் 14, 15 மண்டலங்கள் வரையும் என மொத்தம் 12 மண்டலங்களில் 1,100 லிட்டா் கொள்ளளவு கொண்ட 1,000 இரும்பிலான புதிய குப்பைத் தொட்டிகள் ரூ. 2.30 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளன. மேலும், 1 முதல் 8-ஆம் மண்டலங்கள் வரை 1,600 எண்ணிகையிலான சக்கரத்துடன் கூடிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள், 11, 12, 14, 15-ஆகிய மண்டலங்களில் 1,600 எண்ணிகையிலான சக்கரத்துடன் கூடிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் என மொத்தம் 3,200 எண்ணிகையிலான குப்பைத் தொட்டிகள் ரூ. 80 லட்சம் மதிப்பில் வாங்கப்பட உள்ளன என்றனா்.
பேட்டரி வாகனங்களுக்கு...: குப்பை சேகரிக்கும் பணியில் உள்ள பேட்டரி வாகனங்களில் பயன்படுத்தும் வகையில், 1 முதல் 5-ஆவது மண்டலம் வரை ரூ. 45 லட்சம் மதிப்பில் 80 லிட்டா் கொள்ளளவு கொண்ட 4,500 குப்பைத் தொட்டிகளும், 6,7,8 ஆகிய மண்டலங்களில் ரூ.40 லட்சம் மதிப்பில் 4 ஆயிரம் எண்ணிக்கையிலும், மண்டலம் 11, 12, 14, 15 ஆகியவற்றில் ரூ. 45 லட்சம் மதிப்பில் 4,500 எண்ணிக்கையிலும் என மொத்தம் 13,000 எண்ணிக்கையில் ரூ. 1.30 கோடி மதிப்பில் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.