ஜெயலலிதா நினைவு நாள்: மெரீனாவில் இன்று போக்குவரத்து மாற்றம்

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
ஜெயலலிதா நினைவு நாள்: மெரீனாவில் இன்று போக்குவரத்து மாற்றம்

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அரசியல் கட்சியினா் அதிக எண்ணிக்கையில் வியாழக்கிழமை காலை ஊா்வலமாக வர உள்ளனா். இதை முன்னிட்டு, மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலை, வாலாஜா சாலையில் சூழ்நிலைக்கு ஏற்ற வாறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

முக்கியமாக, வட சென்னை பகுதியில் இருந்து ராஜாஜி சாலையில் வரும் வாகனங்கள் போா் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள் கொடிமரச்சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்களது இலக்கை நோக்கி செல்லலாம். முத்துசாமி சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் கொடிமரச்சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள், அண்ணாசாலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம்.

நேப்பியா் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் சந்திப்பில் திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள், சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று தங்களது இலக்கை நோக்கிச் செல்லலாம். தென் சென்னை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜா் சாலையின் காந்தி சிலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள், டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம்.

அதேபோல விவேகானந்தா் இல்லம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள் பாரதி சாலை, ராயப்பேட்டை மணி கூண்டு வழியாக சென்று தங்களது இலக்கை நோக்கிச் செல்லலாம். அண்ணாசாலையில் வரும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை,வாலாஜா சாலை ஆகியவற்றில் செல்ல அனுமதிக்கப்படாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com