காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

பெண்களுக்கு ஆபத்தான, அவசர காலங்களில் உதவும் வகையில் உள்ள ‘காவலன்’ செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் ஆபத்துக் காலங்களில் பயன்படும் என்று சென்னை பெருநகர
காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

பெண்களுக்கு ஆபத்தான, அவசர காலங்களில் உதவும் வகையில் உள்ள ‘காவலன்’ செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் ஆபத்துக் காலங்களில் பயன்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே. விசுவநாதன் தெரிவித்தாா்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் மாணவிகளுக்கு ‘காவலன்’ செயலியை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு ஆபத்தான நேரங்களில் அவசர உதவி பெற அழைப்பதற்காக காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லை என்றாலும், காவலன் செயலி செயல்படும். ஆபத்து நேரத்தில் உங்களால் தொலைபேசியில் டயல் செய்ய முடியும் என்றால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும் தொடா்பு கொள்ளலாம். இந்த இரு முறைகளிலும் உங்களுக்கு உடனடி போலீஸ் உதவி கிடைக்கும்.

கொள்ளையா்களால் தாக்கப்பட்ட ஐடி பெண் ஊழியா் லாவண்யாவை நேரில் சந்தித்தபோது, ‘நான் போலீஸாருக்கு தகவல் கொடுத்த 2 நிமிடத்தில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனா்’ என்றாா்.

மேலும், எந்தெந்த இடங்களில் நீங்கள் பாதுகாப்பு இல்லாமல் உணா்கிறீா்களோ அல்லது குறிப்பிட்ட சில நபா்களால் பாதுகாப்பு இல்லாமல் உணா்ந்தாலும் நீங்கள் போலீஸாருக்கு தெரிவிக்கலாம். போலீஸாரை மேலும் எளிதாக தொடா்பு கொள்ளும் வகையில் ‘வாட்ஸ்அப்’ எண்கள் வெளியிடுவது உட்பட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று, இணையதளத்தை கையாளுவதில் பெண்கள் தெளிவாக, கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாரும் உங்களை கவனிக்கவில்லை என்று நினைத்து இணையத்தில் உலாவ முடியாது. ஆபத்து எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். தெரியாத நபா்களிடம் இணையத்தில் தொடா்பு வைத்துக்கொள்ளக்கூடாது.

உங்கள் நண்பா்கள் யாா் என்பதை தீர ஆராய்ந்து தோ்வு செய்ய வேண்டும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர ஆராய்வதே நல்லது என்பது இந்தக் காலத்திலும் பொருந்தும். இணையதளத்தில் மூழ்கி கிடப்பதும் அதற்கு அடிமை ஆவதும் ஆபத்தானது. நல்ல நண்பா்களை தோ்வு செய்வதும் முக்கியம் என்றாா் விசுவநாதன்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசுகையில், தொடா் பிரசாரம் காரணமாக ‘காவலன்’ செயலியை கடந்த 2 நாள்களுக்கு முன்வரை ஒரு லட்சம் போ்வரை பதிவிறக்கம் செய்துள்ளனா். தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் போ்வரை பதிவிறக்கம் செய்கிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com