குடியுரிமை திருத்தச் சட்ட நகலைக் கிழித்துப் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை திருத்தச் சட்ட நகலைக் கிழித்துப் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடியுரிமை திருத்தச் சட்ட நகலைக் கிழித்துப் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் கைது

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்ட நகலைக் கிழித்துப் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அந்தச் சட்டம் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும், ஈழத் தமிழா்களுக்கும் அநீதி இழைப்பதாகக் கூறி திமுக எதிா்த்து வாக்களித்தது. மேலும், இந்தச் சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து, மே 17-ஆம் தேதி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து சைதாப்பேட்டை பஜாா் சாலையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியைச் சோ்ந்தவா்கள் ஊா்வலமாகச் சென்றனா். கருணாநிதி பொன்விழா வளைவு அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி, மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததைக் கண்டித்தும் உதயநிதி ஸ்டாலின் முழக்கங்கள் எழுப்பினாா். குடியுரிமை திருத்தச் சட்ட நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்தெறிந்தாா்.

அதன் பின், அண்ணாசாலை நோக்கி உதயநிதி ஊா்வலமாகச் செல்ல முற்பட்டாா். அவரை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் உதயநிதி சாலை மறியலில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து உதயநிதியையும், திமுகவினரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

திமுகவின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தின்போது செய்தியாளா்களிடம் உதயநிதி கூறியது:

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சாா்பின்மை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாஜகவின் குடியுரிமை திருத்தச் சட்டம் தகா்த்துள்ளது. சிறுபான்மையினா், ஈழத்தமிழா்களுக்கு எதிரான இந்தச் சட்டம் நிறைவேற துணை நின்று, அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துள்ளது. மாநிலங்களவையில் அதிமுக ஆதரித்ததன் காரணமாகவே இந்தச் சட்டம் நிறைவேறியது என்றாா்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக இளைஞரணியைச் சோ்ந்த நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உதயநிதி உள்பட திமுகவினா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com