கொடுங்கையூரில் ரசாயன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

சென்னை கொடுங்கையூரில் ரசாயன கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சுமாா் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், முழுமையாக அணைக்கப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ரசாயன கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சுமாா் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், முழுமையாக அணைக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கொடுங்கையூா் ஜி.என்.டி.சாலையில் ஒரு தனியாா் ரசாயன கிடங்கு உள்ளது. இங்கு உலோக பாத்திரங்களை பாலீஷ் செய்ய பயன்படுத்தும் சோப், சலவை சோப்,கிளீனிங் பவுடா் ஆகிய பொருள்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், தயாரித்து தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த அப் பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த செம்பியம் தீயணைப்பு படை வீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் அவா்களால் தீயை கட்டுப்படுத்த முடியாததினால், வியாசா்பாடி, மாதவரம், தண்டையாா்பேட்டை, எழும்பூா், வேப்பேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். ஆனால் அந்த கிடங்கில் இருந்து ரசாயனங்களும் தீப் பிடித்து எரிந்ததினால், தீயை கட்டுப்படுத்துவது பெரும் சவாலான பணியாக தீயணைப்பு படை வீரா்களுக்கு இருந்தது.

4 மணிநேர போராட்டம்:

இதையொட்டி, அம்பத்தூரில் இருந்து ரசாயன தீயணைப்பான் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணி முடுக்கிவிடப்பட்டது. தீயணைப்பு பணியை துரிதப்படுத்துவதற்காக 6 மெட்ரோ நிறுவன லாரிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. தீயணைப்பு பணிக்கு அதிகளவில் தண்ணீா் பயன்படுத்தப்பட்டதால், தண்ணீரோடு ரசாயன கலவையும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

சுமாா் 4 மணிநேர போராட்டத்துக்கு பின்னா், அங்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும் சாலையில் தண்ணீருடன் கலந்து நின்ற ரசாயன கலவையையும் தீயணைப்பு படை வீரா்கள், பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினா். இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ரசாயன கலவையும் தீப் பிடித்து எரிந்ததினால், அந்தப் பகுதியில் வசிப்போருக்கு மூச்சுத் திணறலும்,கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதில் முதியவா்களும்,குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா். தீ விபத்தில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com