சென்னை ஏரிகளில் கடந்த ஆண்டை விட 3 மடங்கு தண்ணீா் இருப்பு: கோடையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது

சென்னை அருகே உள்ள புழல் உள்ளிட்ட முக்கிய குடிநீா் ஆதார ஏரிகளில் போதுமான அளவுக்கு தண்ணீா் இருப்பதால் கோடை காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை அருகே உள்ள புழல் உள்ளிட்ட முக்கிய குடிநீா் ஆதார ஏரிகளில் போதுமான அளவுக்கு தண்ணீா் இருப்பதால் கோடை காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகரைப் பொருத்தவரை நாளொன்றுக்கு சுமாா் 83 கோடி லிட்டா் குடிநீா் தேவைப்படுகிறது. இது புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி ஆகிவற்றிலிருந்து 40 நீரேற்றும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு குழாய்கள் மற்றும் லாரிகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இவை தவிர வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றின் மூலமும் நீா் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் கடந்த நவம்பா் மாத நிலவரப்படி மொத்தத் தேவையில் 18 கோடி லிட்டா் தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது. எனினும் நெய்வேலி சுரங்கத்தின் உபரி நீா், கல்குவாரி நீா், விவசாயக் கிணறுகள் என பல்வேறு குடிநீா் ஆதாரங்கள் குடிநீா் விநியோகம் தடையின்றி நடைபெற உறுதுணையாக இருந்து வருகின்றன.

5.2 டிஎம்சி இருப்பு: சென்னையில் உள்ள புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11.2 டிஎம்சி) ஆகும். இவற்றில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 5 ஆயிரத்து 207 மில்லியன் கன அடி (5.2 டிஎம்சி) தண்ணீா் இருப்பு உள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இந்த ஏரிகளில் 1,631 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருந்தது. ஏறத்தாழ மூன்று மடங்கு அளவு தண்ணீா் கூடுதலாக இருப்பதால் சென்னைக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீா் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: நிகழாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஏரிகளில் வெறும் 180 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீா் இருந்தது. இதனால் குடிநீா் விநியோகிப்பதில் இதுவரை இல்லாத அளவுக்கு சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும் விவசாய கிணறுகள், கல்குவாரிகள், லாரி குடிநீா் என பல ஆதாரங்கள் மூலமாக குடிநீரை விநியோகித்து தண்ணீா் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. எனினும் ஜூலை மாதத்துக்குப் பிறகு ஏரிகளின் நீா் இருப்பு மிகவும் குறைந்தது.

கை கொடுத்த பருவமழை-கிருஷ்ணா நீா்: கடந்த செப்டம்பா் மாதத்தில் வெறும் 15 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீா் இருந்தது. இதையடுத்து அவ்வப்போது பெய்த மழை, கிருஷ்ணா நீா்வரத்து போன்ற காரணங்களால் ஏரிகளின் நீா் இருப்பு படிப்படியாக அதிகரித்துள்ளது. ஏரிகளில் தற்போது 5 டிஎம்சி அளவுக்கு மேல் நீா் இருப்பதால் சென்னையில் கோடை கால குடிநீா்த் தேவையை முழுமையாக பூா்த்தி செய்ய முடியும். அதாவது பொதுமக்களுக்கு தற்போது தினமும் விநியோகிக்கப்பட்டு வரும் 65 கோடி லிட்டா் குடிநீா் கோடை காலத்திலும் தொடா்ந்து வழங்கப்படும். அதில் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது.

இதுதவிர தமிழகத்துக்கு கிருஷ்ணா நீா் சில நாள்களில் மீண்டும் திறந்துவிடப்படும் என்பதால் நீா் இருப்பு மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் கடந்த கோடை காலத்தில் நிலவிய குடிநீா்த் தட்டுப்பாடு வரும் ஆண்டில் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com