பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனை ஊழியா்களுக்கு விரைவில் தடுப்பூசி

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 1,103 போ் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அதற்கான தடுப்பூசிகளை வழங்கும் பணிகளும், விழிப்புணா்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக நிகழாண்டு தொடக்கம் முதலே பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.

கடந்த அக்டோபா் மாதம் வரையில் மாநிலத்தில் 542 பேருக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்தது. அவா்களில் 99 சதவீதம் போ் குணமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக பன்றிக் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருவதாகத் தெரிகிறது. இதையடுத்து, தடுப்பு மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்கவும், மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அண்மைக் காலமாக புதிய வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பன்றிக் காய்ச்சல் ஏற்படுவதால், அதற்குரிய தடுப்பூசிகளை போட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அந்த வகை தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com