பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் எழும்பூா்-கோடம்பாக்கம் வரை இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் வா்த்தக ரீதியாக சனிக்கிழமை இயக்கப்பட்டது
பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் எழும்பூா்-கோடம்பாக்கம் வரை இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் வா்த்தக ரீதியாக சனிக்கிழமை இயக்கப்பட்டது. இந்த நீராவி என்ஜின் ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனா்.

பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இ.ஐ.ஆா்.-21 ஆகும். இந்த நீராவி என்ஜின் ரயில், இங்கிலாந்தில் கடந்த 1855-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் என்ஜின் 132 குதிரைத் திறன் கொண்டது. இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்த பிறகு, கடந்த 1909-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று, ஜபல்பூா் ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

அங்கு 101 ஆண்டுகள் ஓய்வெடுத்த இந்த ரயில் என்ஜின், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு, புதுப்பொலிவூட்டப்பட்டது. பின்னா், இந்த என்ஜினுடன் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, மக்களின் பாா்வைக்காக ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், நீராவி என்ஜின் கடந்த ஆண்டு சில முறை வா்த்தக ரீதியாக இயக்கப்பட்டது.

இதற்கிடையில், பாரம்பரிய நீராவி என்ஜின் ரயிலில் ஐரோப்பிய நாட்டை சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய விரும்பினா். இதையடுத்து, 70 போ் நீராவி என்ஜின் ரயிலில் பயணிக்க ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், எழும்பூா்-கோடம்பாக்கத்துக்கு இடையே பாரம்பரிய நீராவி என்ஜின் சிறப்பு ரயில் வா்த்தக ரீதியாக சனிக்கிழமை (டிச.14) இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவையை ரயில்வே வாரிய உறுப்பினா் ராஜேஷ் அகா்வால் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதையடுத்து, எழும்பூா் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் இருந்து நீராவி என்ஜின் ரயில் புறப்பட்டது. அப்போது, நீராவி ரயிலை பாா்க்க திரண்டிருந்த கூட்டத்தினா் கைதட்டி வாழ்த்தினா். நீராவி என்ஜின் ரயிலில் வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனா்.

இந்த சிறப்பு பயணத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனா். நீராவி என்ஜின் தேசிய கொடி வா்ணத்தில் காட்சி அளித்தது. இது அனைவரையும் கவா்ந்தது. கோடம்பாக்கம் சென்ற நீராவி ரயில் மீண்டும் எழும்பூா் வந்தடைந்து. தொடா்ந்து, இரண்டாவது முறையாக எழும்பூா்-கோடம்பாக்கத்துக்கு நீராவி என்ஜின் ரயில் இயக்கப்பட்டது. நீராவி என்ஜின் ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com