மறுபயன்பாட்டுக்கான கழிவுப் பொருள்கள் விற்பனை: இணையதள சேவை தொடக்கம்

திடக்கழிவுகளில் மறுபயன்பாட்டுக்கு உகந்த பொருள்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பிரத்யேக இணையதள சேவையை சென்னை பெருநகர மாநகராட்சி தொடங்கியுள்ளது.

திடக்கழிவுகளில் மறுபயன்பாட்டுக்கு உகந்த பொருள்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பிரத்யேக இணையதள சேவையை சென்னை பெருநகர மாநகராட்சி தொடங்கியுள்ளது.
அதற்கான அறிமுக நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி, தலைமை பொறியாளர் மகேசன், மேற்பார்வை பொறியாளர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:
திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி சிறப்புற செயல்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 5,220 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1,083 டன் அளவிலான மக்கும் குப்பையின் வாயிலாக இயற்கை உரம், உயிரி மீத்தேன், எரிவாயு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அவற்றைத் தவிர, 400 மெட்ரிக் டன் அளவிலான மரக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளை கையாளுவதற்கான பணிகளை தனியார் மற்றும் பொதுத் துறை மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெகிழி போன்ற மறுசுழற்சி செய்யத் தகுந்த பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொது மக்களும், மறு சுழற்சி பணிகளில் ஈடுபட்டு வருவோரும் மாநகராட்சி மூலம் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் இருந்து மறு பயன்பாட்டுக்கு உகந்த பொருள்களை வாங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தகைய பொருள்கள் தங்களிடம் இருந்தால் அவற்றை விற்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதற்கென பிரத்யேக இணையதள சேவை உருவாக்கப்பட்டு தற்போது அது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. www.madraswasteexchange.com என்ற இணையதள முகவரி அதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், மறுபயன்பாடுள்ள பொருள்கள் இருக்கும் இடம் மற்றும் அவற்றின் அளவு குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதன் வாயிலாக அப்பொருள்களின் இருப்பை மக்களும், மறுசுழற்சியாளர்களும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இந்த நடவடிக்கையின் மூலம் பலருக்கு சுய வேலைவாய்ப்பு கிடைக்கும்; சுற்றுச்சூழல் மாசுபாடும் தடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com