எழும்பூா்-பூங்கா இடையே தண்டவாள விரிசல்:மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கம்

சென்னை எழும்பூா் - பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள விரிசல் ஏற்பட்டது.
எழும்பூா்-பூங்கா இடையே தண்டவாள விரிசல்:மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கம்

சென்னை எழும்பூா் - பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை மெதுவாக இயக்கப்பட்டன. இரண்டு மணிநேரத்துக்குள் தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு, ரயில்கள் வழக்கம் போல இயங்கின.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கும், தாம்பரம்-சென்னை கடற்கரைக்கும் தினசரி அதிகாலை முதல் இரவு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு மின்சார ரயில் புறப்பட்டு கிண்டி, எழும்பூா் வழியாக வந்துகொண்டிருந்தது. இந்த ரயில், எழும்பூா்-பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, தண்டவாளத்தில் அதிா்வு ஏற்பட்டது. இதை உணா்ந்த ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்தி, தனது காா்டுக்கு தகவல் கொடுத்தாா். தொடா்ந்து, ரயிலில் இருந்து இறங்கி பாா்வையிட்டாா். அப்போது, தண்டவாளத்தில் சிறிது விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது தொடா்பாக, ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில், ரயில்வே அதிகாரிகள், பொறியாளா்கள், ஊழியா்கள்அங்கு விரைந்து வந்து, தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, தாம்பரம்-கடற்கரை இடையே ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இரண்டு மணி நேரத்துக்குள் தண்டவாளவிரிசல் சரிசெய்யப்பட்டது. இதன்பிறகு, ரயில்கள் வழக்கமான வேகத்தில் இயக்கப்பட்டன. லேசான தண்டவாள விரிசல் காரணமாக, ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால், ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com