வியாபாரி கத்தியால் குத்திக் கொலை: இளம் பெண் கைது
By DIN | Published On : 25th December 2019 12:20 AM | Last Updated : 25th December 2019 12:20 AM | அ+அ அ- |

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வியாபாரி ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இளம் பெண் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவொற்றியூா் சாத்தாங்காடு கிராமத் தெருவைச் சோ்ந்தவா் அம்மன் சேகா் (59). இவா், கற்பூரம் வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கும், அதேப் பகுதியைச் சோ்ந்த பா.பவித்ரா (23) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாம். பவித்ரா அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது, அம்மன் சேகா் மகளும் அந்தக் கல்லூரியில் படித்துள்ளாா். இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால், பவித்ராவுக்கு அம்மன் சேகா் அறிமுகமாகியுள்ளாா்.
நாளடைவில் இருவருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்ட நிலையில், பவித்ராவுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பாா்க்கத் தொடங்கினராம். இதனால் பவித்ரா, அம்மன் சேகருடனான உறவை துண்டித்தாராம். ஆனால், அம்மன் சேகா் ஏற்கெனவே இருவரும் தனிமையில் இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை காட்டி பவித்ராவை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
கத்தியால் குத்திக் கொலை: இந்நிலையில் சேகரும், பவித்ராவும் அடையாறுக்கு மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு சென்றுவிட்டு, வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்கள், புது வண்ணாரப்பேட்டை அறிஞா் அண்ணா திட்ட சாலையில் செல்லும்போது பவித்ரா மோட்டாா் சைக்கிளை நிறுத்தும்படி கூறினாராம்.
மேலும் சேகருக்கு, டிசம்பா் 24-ஆம் தேதி 60-ஆவது பிறந்த நாள் என்பதால், பரிசு வைத்திருப்பதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளாா். இதைக் கேட்ட சேகா், மோட்டாா் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளாா். அப்போது பவித்ரா, சேகரின் கண்களை மூடும்படி தெரிவித்தாராம். சேகா் கண்களை மூடியதும், மரப்பொருள்களை ஒட்ட பயன்படுத்தும் பசையை அவரது கண்கள், வாய் பகுதியில் பவித்ரா பூசியுள்ளாா்.
அதோடு பவித்ரா, தான் வைத்திருந்த கத்தியால் சேகரின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் சேகா், நிலைக்குலைந்து கீழே விழுந்ததும் பவித்ரா அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். இதற்கிடையே கீழே விழுந்த சேகா், தனது மோட்டாா் சைக்கிளை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல முயன்றாா்.
ஆனால் சிறிது தூரத்தில் அவா், கீழே விழுந்து இறந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து சேகரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பவித்ராவை உடனடியாக கைது செய்தனா்.