நடிகை பானுப்பிரியா வீட்டில் நகை திருட்டு: ஆந்திர பெண் கைது
By DIN | Published On : 02nd February 2019 04:15 AM | Last Updated : 02nd February 2019 04:15 AM | அ+அ அ- |

நடிகை பானுப்பிரியா வீட்டில் நகைத் திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் நடிகை பானுப்பிரியா வீட்டில், ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் பெத்தபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வேலை செய்தார். பானுப்பிரியா வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ஐ-பேடு, கேமரா, இரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை அண்மையில் திருடப்பட்டது. இதில் அவர் வீட்டில் வேலை செய்யும் அந்த சிறுமியும், அவரது தாயும் சேர்ந்து அந்த நகையை திருடியிருப்பது பானுப்பிரியா குடும்பத்தினருக்கு தெரியவந்தது.ஹ
இந்நிலையில் அந்தச் சிறுமியின் தாயார், தனது மகளை பானுப்பிரியா குடும்பத்தினர் வன்கொடுமை செய்ததாக ஆந்திர மாநில காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த சிறுமியும், தாயும் தங்கநகை மற்றும் பொருள்களை திருடியது தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த சிறுமியின் தாயிடம் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனர். விசாரணையின் இறுதியில் அவரை போலீஸார் கைது செய்தனர்.