சுடச்சுட

  
  police

  கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு குறும் படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வெளியிட, அதனைப் பெறுகிறார் நடிகர் விஜய்சேதுபதி. 


  சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் திருட்டு செல்லிடப்பேசிகளை கண்டறியும் செயலி புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்:-
  சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் திருட்டு செல்லிடப்பேசிகளை கண்டறியும் வகையில் டிஜிகாப் (ஈஐஎஐஇஞட) என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி சேவை, கண்காணிப்பு கேமரா குறித்த விழிப்புணர்வு குறும்படம், புதுப்பொலிவு பெற்ற காவல் நிலையங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றின் அறிமுக விழா வேப்பேரியில் புதன்கிழமை நடைபெற்றது.
  டிஜிகாப் செல்லிடப்பேசி செயலியை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் அறிமுகப்படுத்தி, அதன் சேவையை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் விழிப்புணர்வு குறும்பட சி.டி.யை ஆணையர் விசுவநாதன் வெளியிட, அதை திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஆணையர் விசுவநாதன் பேசியது:-
  டிஜிகாப் செயலி மூலம் பழைய செல்லிடப்பேசிகளை வாங்கும்போது, அது திருடி விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய முடியும். அதேபோல பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கும்போது, அந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்களை இச் செயலியில் பதிவேற்றம் செய்தால் அது திருடப்பட்டதா என்பதை கண்டறியலாம். இதற்காக 18 ஆயிரம் செல்லிடப்பேசிகளின் தகவல்கள் இந்த செல்லிடப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல தகவல்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
  இந்த செயலி பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் ஒரு பாலமாக இருக்கும். 
  மேலும் சென்னை மக்கள், அருகில் இருக்கும் காவல் நிலையத்தை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். அதோடு மாநகரில் எங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது போன்ற தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.  
  இந்த செயலி மூலம் செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிள் திருட்டை முற்றிலும் ஒழிக்க முடியும் என நம்புகிறோம். கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டமும், காவல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த வழக்குத் தொடர்பான வாகனங்களை அகற்றும் திட்டமும் நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றார் அவர்.
  இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது: பொதுமக்கள் நலனுக்காக காவல்துறை சார்பில் டிஜிகாப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும் என நினைக்கிறேன். அதேநேரத்தில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. இதைக் களைவதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்கள் முன் குவித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பார்க்கும்போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். தற்போது அந்த வாகனங்கள் அகற்றப்படுவது வரவேற்குரியதாகும். அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை வேண்டும் என்றார் அவர்.
  இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர்கள் ஏ.அருண், ஆர்.தினகரன், மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், ஏ.ஜி.பாபு, அன்பு, சுதாகர், பிரேம் ஆனந்த்சின்கா, சி.மகேஸ்வரி, விஜயகுமாரி, துணை ஆணையர்கள் எஸ்.விமலா, ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai