மெளலிவாக்கம் கட்டடம் இடிப்பு: செலவுத் தொகையை கட்டுமான நிறுவனம் வழங்க உத்தரவு

மெளலிவாக்கத்தில் இடிக்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தை இடித்ததற்கான செலவினத் தொகையை அந்தக் கட்டடத்தை கட்டிய தனியார்
மெளலிவாக்கம் கட்டடம் இடிப்பு: செலவுத் தொகையை கட்டுமான நிறுவனம் வழங்க உத்தரவு


மெளலிவாக்கத்தில் இடிக்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தை இடித்ததற்கான செலவினத் தொகையை அந்தக் கட்டடத்தை கட்டிய தனியார் கட்டுமான நிறுவனம் தான் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டம் மெளலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி ஹவுசிங் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் தலா 11 மாடிகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டியது. இந்த 11 அடுக்குமாடி கட்டடத்தில் ஒன்று  கடந்த 2014-ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இந்த கட்டட விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான கட்டடத்துக்கு அருகே இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, விபத்துக்குள்ளான கட்டடத்தின் அருகே ஆபத்தான நிலையில் இருந்து வரும் மற்றொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க உத்தரவிட்டது. 
அதன்படி, தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் அந்த கட்டடமும் இடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தை இடித்ததற்கான செலவினத்தொகையை வழங்கினால் மட்டுமே கட்டடம் அமைந்திருந்த 103 சென்ட் நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்படைக்க முடியும் அதுவரை அந்த நிலம், அரசின் வசம் இருக்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.மனோகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ மற்றும் எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எல்.சுந்தரேசன், இந்த இரண்டு 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டுவதற்கு முன் திறந்தவெளி நில ஒதுக்கீடு கட்டணமாக ரூ.21.40 லட்சமும், எப்.எஸ்.ஐ கட்டணமாக ரூ.35.50 லட்சமும், உள்கட்டமைப்பு வளர்ச்சி கட்டணமாக ரூ. 39 லட்சமும், பாதுகாப்புத் தொகையாக ரூ. 16.80 லட்சமும் ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையே சுமார் ரூ.1.12 கோடி வருகிறது. எனவே கட்டடத்தை இடித்த செலவினத் தொகையை இந்த தொகையில் இருந்து கழித்து விட்டு எஞ்சியத் தொகையையும், நிலத்தையும் மனுதாரரின் நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் வி.ஜெயபிரகாஷ்நாராயணன், கட்டடத் திட்ட அனுமதியை மீறி மனுதாரரின் கட்டுமான நிறுவனம், 11 மாடிகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டியுள்ளது. விதிகளை மீறியுள்ளதால், பாதுகாப்புத் தொகை முழுவதையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) எடுத்துக்கொள்ளும். 
எனவே அந்த தொகையைத் திரும்பக் கோர மனுதாரருக்கு உரிமையில்லை. அதே போல் மனுதாரர் தரப்பில் கோரப்படும் நில ஒதுக்கீடு கட்டணம், எப்.எஸ்.ஐ கட்டணம், உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணம் ஆகியவை திட்ட அனுமதி பெறுவதற்காக செலுத்தப்பட்டவையாகும். மனுதாரரின் கட்டுமான நிறுவனம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டியதால்தான் இந்த மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டடத்தை இடித்ததற்கான செலவுத் தொகையான ரூ.91 லட்சத்து 54 ஆயிரத்து 264-ஐ வழங்க மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கட்டுமான நிறுவனம் விதிகளை மீறியதன் காரணமாகவே கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தின் தவறுக்காக தமிழக அரசு துன்பத்தை அனுபவிக்க முடியாது. இந்த கட்டுமான நிறுவனத்தின் விதிமீறலின் காரணமாக அப்பாவித் தொழிலாளர்கள் 61 பேர் பலியாகி உள்ளனர், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்காக தமிழக அரசு பெரும் தொகையை செலவழித்துள்ளது.  
கட்டடத்தை இடித்ததற்கான செலவினத் தொகை முழுவதையும் அரசின் தலையில் கட்ட முடியாது. எனவே மனுதாரரின் நிறுவனம் தான் அந்த செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com