சுடச்சுட

  

  கடன் பணத்தைக் கேட்டவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்: தொழிலதிபர் கைது

  By DIN  |   Published on : 13th February 2019 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னை அண்ணாநகரில் கடன் பணத்தைக் கேட்டவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்ததாக தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
  அண்ணாநகர் மேற்கு எச் பிளாக் 22-வது தெருவைச் சேர்ந்தவர் கெ.கெம்பவராஜன் (60). இவர் வில்லிவாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கெம்பவராஜன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கார் ஷோரூமில் பி.எம்.டபிள்யூ கார் தனது மனைவி பெயரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று வாங்கினார்.
  ஆனால் கெம்பவராஜன், அந்த கடனுக்குரிய வட்டியையும்,மாத கட்டணத்தையும் 5 மாதங்களாக சரியாக செலுத்தவில்லை. இதையடுத்து கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள அந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் முருகன் (28) திங்கள்கிழமை கெம்பவராஜன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த கெம்பவராஜனிடம் முருகன் வட்டியையும், மாதாந்திர கட்டணத்தையும் செலுத்தும்படி கூறினார்.
  இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கெம்பவராஜன், தனது வீட்டில் இருந்த ஒரு துப்பாக்கியை காட்டி முருகனை மிரட்டினாராம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் கெம்பவராஜன் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
  இதையடுத்து போலீஸார், கெம்பவராஜனை  செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த துப்பாக்கி ஏர்-கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.                        
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai