சுடச்சுட

  

  சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் காவல் மாணவர் பயிற்சி திட்டம்: பள்ளிகளில் பயிற்சி அளிக்க தலா ரூ.1 லட்சம் நிதி

  By DIN  |   Published on : 13th February 2019 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தேசிய காவல் மற்றும் புலனாய்வு வளர்ச்சித் துறை சார்பில் பள்ளிகளில் காவல் மாணவர் பயிற்சி திட்டத்தைத் தொடங்கி, 8, 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிப்பதற்காக தலா ரூ.1 லட்சம் நிதி ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படவுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  சிறந்த மாணவர்களை உருவாக்க...: மாநில அளவில் பள்ளிகளில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த குறிக்கோளுடன், சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் தேசிய காவல் புலனாய்வு வளர்ச்சித் துறை சார்பில் பள்ளிகளில் காவல் மாணவர் பயிற்சி திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  தவறான பழக்கத்தை தவிர்க்க...: தற்போதைய சூழலில் பள்ளி மாணவ, மாணவியரில் ஒருசிலர் போதைப்பொருள் உட்கொள்ளுதல் உள்ளிட்ட தவறான பழக்க வழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். 
  இதுபோன்ற பழக்கத்துக்கு ஆளானவர்கள் வகுப்புகளில் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன், எதிர்காலத்தில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறுகிறது.
  இதைத் தடுக்கும் வகையில் காவல் மாணவர் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு நடமாடும் வாகனம் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  முதல் கட்டமாக 3 மாவட்டங்களில்...: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக காவல் மாணவர் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர் விளையாட்டு மற்றும் படிப்பில் முழு கவனம் செலுத்த முடிவதோடு, தவறான வழிக்குச் செல்லாத வகையில் நல்வழிப்படுத்தவும் முடியும்.
  இப்பயிற்சியில், காவல் பணிகள், அது சார்ந்த பயிற்சிகளை அந்தந்தப் பகுதி காவல் நிலைய பணியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் படிப்பு மற்றும் திறனறி சார்ந்த பயிற்சிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  இப்பயிற்சிக்காக பள்ளிகளில் 8, 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களின் பயிற்சிக்காக பள்ளிதோறும் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  பள்ளிதோறும் மாணவர்கள் தேர்வு: காவல் மாணவர் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளைச் சேர்ந்த 8, 9-ஆம் வகுப்புகளில் தலா 21 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு காவல் பணி, விளையாட்டு மற்றும் தனித்திறன்களில் பயிற்சி அளிக்கப்படும். 
  இதன் மூலம் பள்ளிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் பிரச்னைகள் போன்றவற்றைக் கண்காணித்து தடுக்கவும் முடியும்.
  இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலக மனித உரிமை பிரிவுத்துறை அலுவலர்கள் கூறியது:
  திருவள்ளூர் மாவட்டத்தில் 210 பள்ளிகளுக்கு தற்போது முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.05 கோடி வரை அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் காவல் துறை மூலம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
  இத்தொகையை   மாணவ, மாணவியருக்கு காக்கிச் சீருடைகள், பயிற்சி உபகரணங்கள் வாங்கப் பயன்படுத்தலாம். தற்போதைய நிலையில் முதல் கட்டமாக 3 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  இத்திட்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் நிலையில், மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் இதை செயல்படுத்த காவல் துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai