சுடச்சுட

  


  நிலப் பிரச்னையில் ஓட்டுநர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து  சிறையில் அடைத்த காவல் ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
  இதுகுறித்து சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் எம்.வேலன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:  ஒரகடம் ஓம்சக்தி நகரில் கடந்த 2007-ஆம் ஆண்டு 1,200 சதுர அடி நிலத்தை வாங்கி வீடு கட்டினேன். இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு எனது வீட்டுக்கு வந்த சாந்தா என்பவர் அந்த இடம் தனக்குச் சொந்தமானது என்றும், உடனடியாக வீட்டைக் காலி செய்ய வேண்டும் எனக் கூறி பிரச்னையில் ஈடுபட்டார். மேலும், இதுதொடர்பாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தா புகார் அளித்தார். அதன் அடிப்படையில்,  கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி அதிகாலை எனது வீட்டு வந்த அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் என்னையும், எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தார். அடிப்படை மனித உரிமை மீறலில் ஈடுபட்ட  ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  ரூ.50 ஆயிரம் அபராதம்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், இந்தத் தொகையை அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட வேலனுக்கு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai