தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி கருத்தரங்கம் இன்று தொடக்கம்: பிரணாப் பங்கேற்பு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்படும் திங்க் எஜூ இரண்டு நாள் கல்வி கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்குகிறது.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்படும் திங்க் எஜூ இரண்டு நாள் கல்வி கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்குகிறது.  இந்தக்  கருத்தரங்கை குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர்  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றனர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து திங்க் எஜூ கல்வி கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. 7-ஆவது ஆண்டாக சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிந்தனைகள் என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் புதன், வியாழன் (பிப்ரவரி 13, 14) ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்படுகிறது.  
இந்தக் கருத்தரங்கில்  பல்வேறு தலைப்புகளிலான அமர்வுகளில் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி,  நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கட்டுரையாளர் சங்கர் அய்யர், மத்திய மரபுசாரா எரிசக்தி துறை துணைச் செயலர் பிரசாந்த் நாயர், சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால், சங்கர் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் வைஷ்ணவி சங்கர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். 
இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெறும் அமர்வுகளில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, மக்களவை உறுப்பினர்கள் வருண்காந்தி, சசிதரூர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com