மெட்ரோ ரயில்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்

சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்
பொது மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அலைமோதிய கூட்டம்
பொது மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அலைமோதிய கூட்டம்


சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் செவ்வாய்க்கிழமையும் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
மெட்ரோ ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். 
ஏஜி. டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை- விமானநிலையம் வரையிலான முதல் வழித்தடத்திலும்,  சென்ட்ரல்-பரங்கிமலை  வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை முழுமையடைந்தது. மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில்,  மெட்ரோ ரயில் இயக்கப்படும் எல்லா வழித் தடத்திலும் திங்கள்கிழமை இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
 இதையடுத்து, மெட்ரோ ரயில்களில் பயணிக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் திங்கள்கிழமை காலை மக்கள் குவிந்தனர். 
இதற்கிடையில், சைதாப்பேட்டை-சின்னமலை இடையே உயர் அழுத்த மின் கம்பியில் திங்கள்கிழமை காலை பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலில் சுற்றி பார்க்க வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்ட பிறகு, மெட்ரோ ரயில்கள் இந்த வழித்தடத்தில் வழக்கம்போல இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் பயணத்தைப் பொருத்தவரை, திங்கள்கிழமை அன்று, 2 லட்சத்து 1,556 பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமையும் குவிந்த கூட்டம்: இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் செவ்வாய்க்கிழமையும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்  செவ்வாய்க்கிழமையும் அலைமோதியது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு வரை மக்கள் இலவசமாக சுற்றிப் பார்த்து ரசித்தனர். மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்பகுதி, வெளிப்பகுதி ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை கண்டு வியந்து பாராட்டினர். 
செவ்வாய்க்கிழமை, மெட்ரோ ரயில்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்றும் இலவசம்    
பொதுமக்கள்  புதன்கிழமையும் (பிப். 13) இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com