முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கள்ளநோட்டு வைத்திருந்ததாக கால்டாக்சி ஓட்டுநர் கைது
By DIN | Published On : 28th February 2019 04:13 AM | Last Updated : 28th February 2019 04:13 AM | அ+அ அ- |

சென்னை வடபழனியில் கள்ளநோட்டு வைத்திருந்ததாக கால்டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை வடபழனியில் ஒரு கும்பல் கள்ளநோட்டு வைத்திருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி அப் பிரிவு போலீஸார், வடபழனி நெற்குன்றம் பாதையில் ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், போலீஸாரை பார்த்ததும் தப்பியோடினாராம். இருப்பினும் போலீஸார், அந்த நபரை விரட்டிப் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனையிட்டனர். இச் சோதனையில் அவரிடம் இருந்த ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள இரண்டாயிரம் கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், அயனாவரம் சோலைத் தெருவைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் மோகன்குமார் (27) என்பதும், அந்த கள்ளநோட்டுகள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்பதும், மோகன்குமாருக்கு அந்த கள்ளநோட்டுகளை சுரேஷ் என்பவர் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அப் பிரிவு போலீஸார், மோகன்குமாரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மோகன்குமாரை கைது செய்தனர். சுரேஷ் என்பவரை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்.