முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னையில் நூதன முறையில் மோசடி: நைஜீரிய இளைஞர் உள்பட 5 பேர் கைது
By DIN | Published On : 28th February 2019 04:12 AM | Last Updated : 28th February 2019 04:12 AM | அ+அ அ- |

சென்னையில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கீழ்க்கட்டளையில் ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார், பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தங்களது நிறுவனத்தின் இன்டர்நெட் பேங்கிங், செல்லிடப்பேசியில் உள்ள மொபைல் பேங்கிங் செயலி ஆகியவை ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்த ரூ.25 லட்சம் திருடப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணம் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர்களின் வங்கி கணக்குக்கு சென்றிருப்பதாகவும், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்யும்படியும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
சிம் ஸ்வைப் மோசடி: அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சிம் ஸ்வைப் எனப்படும் இந்த மோசடியில் செல்லிடப்பேசியில் மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் நபரை மோசடி கும்பல் கண்டறிவதும், பின்னர் அந்த நபரின் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகார் செய்து அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்வதும், அதையடுத்து அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்கார்டு பெற்று, அந்த சிம்கார்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களைத் திருடி வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திருடுவது தெரியவந்தது. இந்த மோசடிக்காக அந்தக் கும்பல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பண பரிவர்த்தனைக்கு மின்னஞ்சல்,செல்லிடபேசிகள் ஆகியவற்றை ஹேக் செய்வதும் தெரியவந்தது.
மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் நைஜீரியாவைச் சேர்ந்த சிலரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்தும் கைவரிசை காட்டி வருவதும், அந்த கும்பலைச் சேர்ந்த சிலரை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்திருப்பதும் தெரியவந்தது.
5 பேர் கைது: இதையடுத்து ஹைதராபாதுக்கு விரைந்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், சிறையில் இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஓடாம் ஹென்றி (26), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த க.சந்தோஷ் பானர்ஜி (52),ராஜ்குண்டு (34),மா.அங்கன்ஷா (31), மி.சந்தன்வர்மா (42) ஆகிய 5 பேரை கைது செய்து, புதன்கிழமை சென்னை அழைத்து வந்தனர்.
இந்த கும்பலுக்கு ஜேம்ஸ் என்பவர் தலைவனாக இருப்பதும் மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக இவர்கள் செலவு செய்துவந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் பலரை தேடி வருகின்றனர்.