சுடச்சுட

  

  ராயப்பேட்டை மருத்துவமனையில் தாய் திட்டம்: 30 நாள்களில் 4,600 பேருக்கு உயர்தர அவசரகால சிகிச்சை

  By DIN  |   Published on : 03rd January 2019 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  royapeti_gh

  ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு.


  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (தாய்) தொடங்கப்பட்ட 30 நாள்களில் 4,682 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் காயமடைந்தவர்களாவர். அதைத் தவிர, மாரடைப்பு, வலிப்பு நோய், நச்சு பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தாய் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
  நோயாளிகளின் உடல் நிலையைப் பொருத்து அவர்களை வகைப்படுத்தி, அதற்குரிய சிகிச்சைகளை துரிதமாகவும், துல்லியமாகவும் அளிக்கப்படும் நடைமுறை (தாய்) முக்கிய மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள சிகிச்சை முறைகளைப் பின்பற்றி அத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக அந்நாட்டுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.
  முதல்கட்டமாக கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட 75 மருத்துவமனைகளில் சோதனை முறையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. சிகப்பு, மஞ்சள், பச்சை என மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான உயிர் காக்கும் சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
  இந்தப் புதிய நடைமுறையால் முன்பைக் காட்டிலும் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி மருத்துவமனையை பொருத்தவரையில், 8.2 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், தாய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்ட பிறகு 2.8 சதவீதமாகக் குறைந்தது.
  இதைத் தொடர்ந்து, இந்த சிகிச்சைப் பிரிவுகளை மேலும் சில மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக ரூ.15 லட்சம் செலவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
  இதையடுத்து, ஏற்கெனவே அந்த மருத்துவமனையில் செயல்பாட்டில் இருந்த அவசர சிகிச்சைப் பிரிவு, தாய் திட்ட சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக செயற்கை சுவாசக் கருவிகளும், மருத்துவப் பரிசோதனை சாதனங்களும் தருவிக்கப்பட்டன.
  மூன்று பிரிவுகளாக சிகிச்சைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் ராயப்பேட்டை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது. இதுவரை 4,682 பேர் அங்கு சிகிச்சை பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சையின்போது நோயாளிகள் இறந்த சம்பவங்கள் எதுவும் 
  இதுவரை நிகழவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai