முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
வடபழனி: தீ விபத்துக்குள்ளான கட்டடம்: உயர்நீதிமன்றம் கேள்வி
By DIN | Published On : 04th January 2019 04:34 AM | Last Updated : 04th January 2019 04:34 AM | அ+அ அ- |

வடபழனியில் தீ விபத்துக்குள்ளான, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு கடந்த 20 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட வரித்தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடலாமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்த கட்டடத்துக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் கட்டடத்துக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், தீ விபத்துக்குள்ளான கட்டடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. எனவே அந்த கட்டடத்துக்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தீ விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், அறிக்கையில் குற்றவியல் மற்றும் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான விவரங்கள் இல்லை. விசாரணை அதிகாரி யார் என்பதும் இல்லை. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு கடந்த 20 ஆண்டுகளாக எப்படி வரி வசூலித்தீர்கள் என்பது புரியவில்லை. இந்தத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடலாமா எனக் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு பதிலளிக்க டிராபிக் ராமசாமி தரப்பு கால அவகாசம் கேட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணைக்கு மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டனர்.
மேலும், இதுதொடர்பாக மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.