நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்: கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்பு

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்


தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினர்.
புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் மருத்துவர்களை வேண்டுமென்றே பழிவாங்கக் கூடியச் சூழல் உருவாகும் என்றும் அவர்கள் கூறினர்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஏற்கெனவே இருந்த சில விதிகள் மாற்றியமைக்கப்பட்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக, மருத்துவர்களோ, மருத்துவமனையோ அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் அதனை எதிர்த்து எவர் வேண்டுமானாலும் நீதிமன்றங்களை நாடலாம் என்ற விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. இந்த அம்சமானது மருத்துவர்களுக்கு பாதகமாக அமைந்திருப்பதாகக் கூறி இந்திய மருத்துவச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதன் ஒரு பகுதியாக அச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மருத்துவர்கள் கருப்புப் பட்டையை அணிந்து வெள்ளிக்கிழமை பணிகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்திருந்ததாகத் தெரிகிறது. 
இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கனகசபாபதி கூறியதாவது:
தற்போது உள்ள நடைமுறைப்படி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளனர். புதிய சட்டத் திருத்தத்தில் அது மாற்றப்பட்டு, அரசே எவரை வேண்டுமானாலும் தலைவராக நியமிக்கலாம் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மருத்துவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடும் நடவடிக்கைகளிலும் சில விஷயங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதாவது, தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளியோ அல்லது அவரது உறவினரோ குறிப்பிட்ட மருத்துவருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடலாம் என்ற விதி தற்போது அமலில் உள்ளது. அதை மாற்றி, எவர் வேண்டுமானாலும், எந்த மருத்துவருக்கு எதிராகவும் வழக்குத் தொடுக்கலாம் என புதிய விதி அந்தச் சட்டத்திருத்தத்தில் வகுக்கப்பட்டுள்ளது.
இதனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவர்களை நீதிமன்றத்துக்கு அலைக்கழித்து வேண்டுமென்றே பழிவாங்கக் கூடியச் சூழல் உருவாகும். இத்தகைய ஷரத்துகளை நீக்கக் கோரியும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து மருத்துவர்களை விடுவிக்கக் கோரியும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாகவே தற்போது கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com