Enable Javscript for better performance
மனிதநேயத்தை வளர்ப்பது புத்தகங்களே- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மனிதநேயத்தை வளர்ப்பது புத்தகங்களே

    By DIN  |   Published On : 09th January 2019 04:37 AM  |   Last Updated : 09th January 2019 04:37 AM  |  அ+அ அ-  |  

    book

    நடிகர் நாசர், பேராசிரியர் ராமச்சந்திரன், வயிரவன், காந்திகண்ணதாசன், மெய்யப்பன் உள்ளிட்டோர்.

    சாதி, மதம், நாடு எல்லைகளைத் தாண்டி மனிதநேயத்தை வளர்ப்பது புத்தகங்களே என்று நடிகர் நாசர் கூறினார். 
    சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
     எனக்கு வாசித்தேன்...யோசித்தேன் என்று பேசுவதற்கு தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் யோசித்துப் பார்த்தால் நான் புத்தகங்களால் வளர்க்கப்பட்ட மனிதன்.
    ஒரு புத்தகத்தை மனமொன்றி வாசித்தால் அது யோசிக்க வைக்கும். யோசனை வாழ்க்கையில் முடிவெடுக்கத் தூண்டும். முடிவெடுக்கத் தேவையான ஞானம் பிறக்கும். 
    இன்று அச்சு வடிவத்தைத் தாண்டி அறிவு வளர்ந்து பரந்து விரிந்து இருக்கிறது. ஒரு செல்போனில் உங்களுடைய விரல்நுனியில் வடதுருவத்தின், தென்துருவத்தின் தாவரங்களை, விலங்குகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். 
    ஆனால் செல்போன் அன்பைத் தருமா? தராது. புத்தகங்களே நமக்கு நண்பனாகி அன்பைப் பொழியும். 
    ஒரு நடிகன் அவசியம் படிக்க வேண்டும். நடிப்பு என்பது சகமனிதனை, வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தல். அப்படி நேரடியாகக் கவனிக்கத் தொடங்கினால் ஒருவரைக் கவனிக்கவே எவ்வளவோ காலம் ஆகிவிடும். பிற மனிதர்களின் அறிவு, அனுபவம் என்னை வந்தடைய நீண்ட நாள்களாகலாம். ஆனால் ஒரு புத்தகம் எங்கோ தொலைவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது. எனவே ஒரு நடிகன் அவசியம் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பேன். 
    நடிப்பு என்பது பிறவியிலேயே வரக் கூடியது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. யார் வேண்டுமானாலும் போதிய பயிற்சி இருந்தால் நடிகனாகலாம். 
    ஸ்டோனிஸ் லா வோஸ்கி என்பவர் நடிப்பு தொடர்பாக மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஸ்டோனிஸ் லா வோஸ்கி தியரி எனப்படும் புத்தகமும் அவற்றில் ஒன்று. ஒரு நடிகனின் கடமை நன்றாக நடிப்பது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் தனது புத்தகத்தில் சொன்ன கருத்து, என் வாழ்க்கையை மாற்றிப் போட்டது. ஆம். ஒரு நடிகனின் கடமை கொடுக்கப்பட்ட காட்சியை சக நடிகருடன் சேர்ந்து உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல உதவுவது என்பதே அவரின் கருத்து. அதை இன்றுவரை பின்பற்றி வருகிறேன். அதைப் படிக்கவில்லை என்றால் நான் இந்தநிலைக்கு வந்திருக்க முடியாது. 
    நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சென்னைக்கு நடிப்பதற்காக வந்து பட வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்த காலம் அது. மிகவும் துன்பப்பட்டு தற்கொலை எண்ணம் கூட தலைதூக்கிய காலம். அப்போது ஒரு நண்பன் எனக்கு ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல் என்ற புத்தகத்தை கொடுத்தான். ரிச்சர்ட் பாக் என்பவர் அந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் என்னை இணைத்துக் கொண்டு படித்தபோது, என் மனதில் இருந்த சோர்வு, தற்கொலை எண்ணம் எல்லாம் பறந்தோடிவிட்டன. 
    சமகால புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னை நல்ல நடிகனாக மாற்றியிருக்கிறது.
    அலெக்ஸி ஹேலி என்பவர் எழுதிய ரூட்ஸ் என்ற புத்தகம் அடிமைச் சந்தையைப் பற்றிச் சொல்லும் புத்தகம். கறுப்பின மக்களை ஆடுமாடுகளைப் போல ஏற்றிச் சென்று விற்பார்கள். போகிற பாதையில் பலர் இறந்துவிடுவார்கள். அந்த புத்தகத்தைப் படிக்கும்போது நான் என்னைக் கறுப்பின மக்களில் ஒருவனாக நினைத்துக் கொள்வேன். சாதி, மதம், நாடு எல்லைகளைத் தாண்டிய மனிதநேயத்தை வளர்ப்பது புத்தகங்களே என்றார் நாசர்.
    இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் இராமச்சந்திரன் பேசினார். பபாசியின் மேனாள் தலைவர் காந்தி கண்ணதாசன், வயிரவன், மெய்யப்பன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp