சுடச்சுட

  
  merina


  சென்னை மெரீனாவில் 2 ஆயிரம் கடைகள் அகற்றப்படாதது குறித்து மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடற்கரையில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு, வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு புதிதாக விதிமுறைகளை வகுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  நாட்டுப்படகு மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் (கடல் மைல்) தொலைவுக்கு அப்பால் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலில் ஈடுபடக்கூடாது என மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்தும், முராரி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்திருந்தார். 
  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குப்பைக்கூளமாக காட்சியளிக்கும் மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம் வகுக்க வேண்டும், மேலும் அந்தப் பகுதியில் உள்ள மீன் கடைகளை ஒழுங்குபடுத்தி, மீன்கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இதற்காக மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
  இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜராகி அறிக்கை சமர்ப்பித்தார்.
  அந்த அறிக்கையில், கடலோர ஒழுங்குமுறை சட்டத்துக்குட்பட்டு ரூ.40 கோடி செலவில் மெரீனா கடற்கரையில் உணவகங்கள், மின்விளக்குகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள், பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
  அப்போது, நீதிபதிகள், மெரீனாவில் உள்ள உணவகங்களால் கடல்வாழ் உயிரினங்களான கடல்ஆமைகள், மீன்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதா ?, அங்குள்ள கடைகளை ஏன் இன்னும் அப்புறப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினர். அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இதுதொடர்பாக அந்தப் பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
  இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரையில் உள்ள சுமார் 2 ஆயிரம் கடைகளை அகற்றிவிட்டு, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். கடைகள் வைக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் அனுமதியளிக்க வேண்டும். மெரீனாவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai