கவனியுங்கள்!

கவனியுங்கள்!


உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் (தொகுதி-1) - பதிப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி; ரூ.600; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை-90.
உ.வே.சாமிநாதையர் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் அனுப்பிய கடிதங்களை கவனமாகத் தொகுத்து வைத்திருக்கிறார். இக்கடிதங்களில் அமைந்துள்ள கருத்துகள் பலவும் அவர் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. ஜி.யு.போப், ஜூலியன் வின்சோன், வித்துவான் தியாகராச செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், சந்திரசேகர கவிராஜ பண்டிதர், சி.வை.தாமோதரம்பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் முதலான பல அறிஞர்கள் உ.வே.சா.வுக்கு எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக் கடிதங்கள், அவற்றின் உள்ளடக்கம், கடிதம் எழுதியவர்களின் தகுதி, கால வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அரிய ஆவணம்.


சில்வியா பிளாத் மணிக்குடுவை - 
தமிழில்: ஜி.விஜயபத்மா; ரூ.300; 
நாதன் பதிப்பகம், சென்னை-93.
அமெரிக்காவின் மசாசூùஸட்டில் 1932-இல் பிறந்த பெண் கவிஞர் சில்வியா பிளாத் எழுதிய நூலின் தமிழாக்கம். பலவிதமான துன்பங்களும், சோகங்களும் அவரைத் தாக்க பலமுறை தற்கொலைக்கு முயன்றார் சில்வியா பிளாத். அந்த அனுபவங்களையும் இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். மணமுறிவு, உடல் நலக்குறைவு ஆகியவை அவரின் துன்பத்தை அதிகப்படுத்த அவர் தனது முப்பதாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். சில்வியா பிளாத்தின் மன உணர்வுகள், அமெரிக்கக் குடும்பங்களில் பெண்களின் நிலை குறித்து இந்நூலில் துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.


திரை இசைக் களஞ்சியம் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) - வாமனன்; ரூ.1000; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108.
மக்கள் இசையான திரை இசையின் வரலாற்றை, 140-க்கும் மேற்பட்ட திரை இசைக் கலைஞர்களை, காலவரிசைப்படி இந்நூல் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கலைஞர்களின் வாழ்வையும், சாதனைகளையும் நினைவில் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்த்திரை இசையின் வாயிலாக மக்கள் அடைந்த இன்பத்தை, அது தொடர்பான வரலாற்றைப் படிப்பதின் வாயிலாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.


மார்க்சியம் இன்றும் என்றும் - தொகுப்பும் விளக்கமும் (மூன்று நூல்கள்)- தமிழில்: கே.சுப்பிரமணியன்; ரூ.500; விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்-15.
மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் முதல் தொகுதி கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்து பல் கஸ்பர் எழுதிய நூலின் தமிழாக்கமாகும். இரண்டாவது தொகுதி டேவிட் ஸ்மித்தின் காரல் மார்க்ஸின் மூலதனம் சித்திர வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாவது தொகுதி பரிதி எழுதிய மாந்தர் கையில் பூவுலகு என்ற நூலாகும்.
மார்க்சியத்தின் அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ள எளியமுறையில் எழுதப்பட்டுள்ள இந்நூல்கள், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் கொண்டு 
வரப்பட்டிருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com