தமிழில்தான் சொற்கள் அதிகம்!

உலகின் எந்த மொழியையும்விட தமிழில்தான் அதிக சொற்கள் இருக்கின்றன என்று எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார்.
புத்தகக் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன், 
புத்தகக் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன், 


உலகின் எந்த மொழியையும்விட தமிழில்தான் அதிக சொற்கள் இருக்கின்றன என்று எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார். சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு புத்தகங்கள் சுமையல்ல என்ற தலைப்பில் அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். 
மேலும் அவர் கூறியதாவது:
 தமிழில்தான் அதிக சொற்கள் உள்ளன. கம்பன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சொற்களை தனது கம்ப ராமாயணத்தில் பயன்படுத்தியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர் வெறும் 25 ஆயிரம் சொற்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஜான் மில்டனும் கூட 35 ஆயிரம் சொற்களுக்கு மேல் பயன்படுத்தவில்லை. தமிழில்தான் 1 லட்சத்து 24 ஆயிரம் சொற்களுக்கும் மேல் இருக்கின்றன. 
இப்போது தமிழர்கள் பலர் புத்தகம் படிப்பதில்லை. கேட்டால் நேரமில்லை என்பார்கள். 
வெளிவரக் கூடிய புதிய திரைப் படத்தின் காலைக் காட்சியைப் பார்ப்பதற்காக காலை 6.00 மணிக்கே தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்கும் ஒரே இனம் தமிழ் இனம்தான். அதற்கெல்லாம் நேரத்தை ஒதுக்க முடிகிறது. புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை. பெரியவர்கள் புத்தகங்களைப் படிக்கிறீர்களோ இல்லையோ, குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள். புத்தக வாசிப்பை அவர்களுக்குப் பழக்கமாக்குங்கள். தமிழில்தான் எவ்வளவு சொற்கள்? அவற்றை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துங்கள். 
யானை என்ற ஒரு சொல்லுக்கு தமிழில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. யானை, வேழம், களிறு, மாதங்கம், கைம்மா, ஆம்பல் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த இடத்தில் யானையைப் பயன்படுத்துவது, எந்த இடத்தில் களிறுவைப் பயன்படுத்துவது என்பதை தமிழர்களாகிய நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மனப்பாடம் செய்த செய்யுள் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் இன்றைய குழந்தைகளின் மனப்பாடத் திறன் குறைந்துவிட்டது. எனவே குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது தமிழை வாழ வைப்பதாகும். 
குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். திருமணம் போன்ற விழாக்களில் தாம்பூலப் பையில் புத்தகத்தைப் போட்டுக் கொடுங்கள். அதற்காக திருக்குறள் புத்தகம் ஒன்றையே போடாமல், சிறந்த தமிழ் இலக்கிய புத்தகங்களைப் போட்டுக் கொடுங்கள்.
தமிழில் ஒரு நூலை வெளியிடும்போது முதலில் எல்லாம் ஆயிரம் பிரதிகள் அச்சடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வெறும் 100 அல்லது 200 பிரதிகளை அச்சடிக்கிறார்கள். இது எந்த அளவுக்கு நாம் தமிழைப் பாதுகாப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. மலையாளத்தில் முதற்பதிப்பு 30 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். உண்மையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. 
மொழியைப் பண்பாட்டை மதிக்கும் எழுத்தாளர்களை நாம் மதிக்க வேண்டும். புத்தகத்தை மதித்தால்தான் மக்கள் எழுத்தாளர்களை மதிப்பார்கள் என்றார். 
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன், மக்களுக்குப் புரியாத முறையில் மிகக் கடினமாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்க் கவிதையை எல்லா மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி மாற்றியமைத்தது பாரதிதான்; பாரதி கவிதை ஒரு சரித்திரத் திருப்புமுனை என்றார். அவர் மேலும் கூறுகையில், அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று தொடங்கும் பாரதியின் கவிதை உலகத்திலேயே மிகச்சிறந்த கவிதை. அந்தக் கவிதையின் இறுதியில் வரும் வரிகள் அந்தக் கவிதையை நாடகமாக்குகின்றன. 
1947-இல் சுதந்திரம் அடைவதற்கு 30 ஆண்டுகளுக்கும் முன்னரே, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடிய தீர்க்கதரிசி பாரதி. மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று இந்த நாட்டையே சொந்தம் கொண்டாடிய பெரும் செல்வந்தன் பாரதி என்றார். 
இந்த நிகழ்ச்சியில் வாங்க சிரிப்போடு சிந்திக்கலாம் என்ற தலைப்பில் மணிகண்டன் உரையாற்றினார். பபாசி செயற்குழு உறுப்பினர் எம்.சிராஜுதீன், வி.புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com