சுடச்சுட

  
  BOOK

  " தமிழைப் பக்தி மொழி என்று சொன்னார் தனிநாயக அடிகள். என்னைப் பொருத்த அளவில் தமிழ் கவிதை மொழி'' என்றார் கவிஞர் முத்துலிங்கம்.
   சென்னை புத்தகக் கண்காட்சியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் "திரைப்பாடல் இலக்கியம்' என்ற தலைப்பில் அவர் பேசியது:
   "உணவின் சத்துகள் ரத்தத்தில் கலக்கும். புத்தகத்தின் கருத்துகள் சித்தத்தில் கலக்கும். உலகில் கவிதை மொழி என்று இரண்டு மொழிகளைச் சொல்வார்கள். ஒன்று கிரேக்க மொழி. மற்றது நமது தமிழ்மொழி.
   கவிதைக்குரிய மொழி தமிழ் என்று ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு குழந்தை பிறந்ததுமே முதலில் அது கேட்பது தாயின் தாலாட்டுப் பாடல்களைத்தான். அந்தத் தாலாட்டுப் பாடல்களை கேட்டால் உலக மகாகவிஞர்களின் கவிதைகளில் காணப்படும் கவிதைத்தன்மையை காணலாம்.
   திரைப்பாடல் என்றால் இழிவு படுத்திப் பேசியவர்கள் உண்டு. "மெட்டுக்குப் பாட்டு எழுதுவதுதானே? என்று சொன்னவர்கள் உண்டு.
   இலக்கண நெறிப்படி எழுதப்படும் மரபுக் கவிதைகளை எழுதுவதில் என்ன சிரமம் இருக்கிறதோ... எவ்வளவு உழைப்பு இருக்கிறதோ... அதை விட அதிகமான சிரமம் மெட்டுக்குப் பாட்டு எழுதுவதிலும் உண்டு. எனவே அதைத் தாழ்வாகக் கருத வேண்டியதில்லை.
   கண்ணதாசன் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு நிகரான கவிதைத் தன்மையுடன் பல திரையிசைப் பாடல்களை எழுதியிருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு முன்பு கம்பதாசன் என்ற திரைப்படப் பாடலாசிரியர் கவித்துவத்தின் உச்சத்தைத் தொடும் பல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக, வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்து பழந்தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கம்பதாசன் அதைத் தனது திரைப்படப் பாடலில் "மின்னல் போல் வாழ்க்கை' என்று குறிப்பிட்டிருப்பார்.
   இலக்கியங்களில் உள்ள பல சிறப்பான தன்மைகளைத் தனது திரைப்படப் பாடல்களுக்குள் கொண்டு வந்தவர் கம்பதாசன்.
   கம்பதாசனின் பாடல்கள் மட்டுமல்ல, அனைத்துக் கவிஞர்களின் திரைப்படப் பாடல்களிலும் இலக்கியங்களில் உள்ள பல சிறப்பானதன்மைகள் இருக்கின்றன'' என்றார். பேராசிரியர் நெல்லை கவிநேசன் "நம்பிக்கை நம் கையில்' என்ற தலைப்பிலும் டாக்டர் துளசி குமார், "வாழ்க்கைக்குத் தேவை மருத்துவம்' என்ற தலைப்பிலும் பேசினர். பபாசி செயற்குழு உறுப்பினர் இராம.மெய்யப்பன் வரவேற்புரையும், சு.பிரபாகரன் நன்றியுரையும் நிகழ்த்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai