சுடச்சுட

  

  ஸ்ரீநீலாஞ்சனி, பள்ளி ஆசிரியை, சோளிங்கர்:

  "எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்குத் தடையாக இப்போது நிறைய குறுக்கீடுகள் வந்துவிட்டன. முதலில் எல்லாம் குழந்தைகள் டி.வி. யில் குழந்தைகளுக்கான சேனல்களை, கார்ட்டூன் சேனல்கள மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் செல்போனில் மயங்கிக் கிடக்கிறார்கள். 
  டி.வி.யில் வருவதை விட இப்போது செல்போனில் குழந்தைகளுக்கு நிறையவே கிடைக்கின்றன. அவர்களின் விரல்நுனியில் கார்ட்டூன் விடியோக்கள் உட்பட எல்லாம் கிடைக்கின்றன. தங்களை மறந்து அதில் பொழுதைப் போக்குகிறார்கள். குழந்தைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமல் எதிலாவது மூழ்கிக் கிடப்பது பரவாயில்லை என்று பெற்றோரும் நினைக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்களைத் தவிர படிப்பதற்கு எதுவுமில்லாமல் போய்விட்டது. வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக எங்கள் பள்ளியில் அவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிறோம். 
  பரிசளிப்பதற்காகக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் நீதிநெறிக் கதைகளை வாங்கியிருக்கிறோம். படிப்பு தொடர்புடைய மின்னட்டைகளையும் வாங்கியிருக்கிறோம். இப்போது அகராதியின் தன்மையே மாறிவிட்டது. துறைசார்ந்த அகராதிகள் நிறைய வந்துவிட்டன. STUDENTS DICTIONARY OF CHEMISTRY, STUDENTS DICTIONARY OF PHYSICS என பல்வேறு பாட சம்பந்தமான அகராதிகளை வாங்கியிருக்கிறோம். 
  பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்களின் வரலாறு பற்றிய புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம். கிட்டதட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கியிருக்கிறோம்.
  எங்கள் பள்ளியில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு ஏதாவது ஒரு போட்டியை நடத்துவோம். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப்போட்டி, திருக்குறள் போட்டி, கலரிங் போட்டி, க்விஸ் என நாங்கள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இப்போது நாங்கள் வாங்கிச் செல்லும் புத்தகங்களைப் பரிசாக அளிக்க இருக்கிறோம்'' என்றார். 
  சிவாஜி, ஆரணி:

  "நான் இந்த புத்தகக் கண்காட்சிக்கு சித்தர்கள் தொடர்பான புத்தங்கள், ஆன்மிகப் புத்தகங்கள் வாங்குவதற்காக வந்தேன். 
  சித்தர்கள் வரலாறு, திருமந்திரம், நாமதீப நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆதிசங்கரரின் 'ஆத்மபோதம்', "தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்', "ஞான தீப நிகண்டு', "போகர் ஏழாயிரம்', "அகத்தியர் குணவாகடம் உரை', "சித்தர் திருமந்திரம் ஆராய்ச்சி' இப்படி நிறைய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இன்னும் வாங்க வேண்டியிருக்கிறது. இன்னும் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். 
  இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் ஆன்மிகப் புத்தகங்கள் குறைவாக உள்ளன. குழந்தைகள் புத்தகங்கள் அதிகம் உள்ளன. குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு பெற்றோர் படிக்கும் பழக்கத்தைக் கைவிட்டதையே இது காட்டுகிறது. 
  சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கண்காட்சியில் உணவுப் பொருள்களை விற்பதற்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். புத்தகம் வாங்க வந்தவர்களில் பலர் உணவு விற்கும் இடங்களில் தான் அதிகமாக இருக்கின்றனர். அடுத்துவரும் ஆண்டுகளிலாவது ஆன்மிகப் புத்தகங்களை அதிகம் கொண்டு வந்தால் நல்லது'' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai