சுடச்சுட

  

  காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார்: மெரீனாவில் ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிப்பு

  By DIN  |   Published on : 15th January 2019 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tron


  காணும் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.
  பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான காணும் பொங்கல் வியாழக்கிழமை (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் மட்டும் ஆயுதப்படை போலீஸார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  மெரீனா கடற்கரையில் சுமார் 5 லட்சம் மக்கள் வரை அன்று கூடுவர் என காவல்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மெரீனா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு பொதுமக்கள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். கடலுக்குள் யாரும் செல்லாமல் இருப்பதற்கு கட்டைகள் மூலம் தடுப்பு அமைக்கப்படுகிறது.
  மேலும் கடலோரப் பகுதியை கண்காணிப்பதற்காக குதிரைப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். மக்களை உஷார்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டை தடுப்பதற்காக குற்றப்பிரிவு போலீஸார் மாறுவேடத்தில் ரோந்தில் ஈடுபட உள்ளனர். மேலும் கடற்கரையில் 16 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
  போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காமராஜர் சாலையில் மட்டும் 500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இணை ஆணையர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் 3 துணை ஆணையர்கள் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. மெரீனாவில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
  நீச்சல் வீரர்கள்: கடல் அலையில் சிக்குவோரை மீட்பதற்காக 100 நீச்சல் வீரர்கள் படகுகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்படுகின்றனர். மேலும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் காவல் உதவி மையங்களில் கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு ஒரு அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர்,செல்லிடப்பேசி ஆகியவற்றை எழுதி, அவர்களது கையில் போலீஸார் மாட்டி விடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
  தற்காலிக கட்டுப்பாட்டு அறை: பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களையும், கேலி-கிண்டல் செய்கிறவர்களையும் கண்டறிவதற்காக பெண் காவலர்கள் மாறுவேடத்தில் ரோந்து செல்கின்றனர். மெரீனா கடற்கரையில் போலீஸார் தகவல்களை உடனுக்குடன் பரிமாறி கொள்வதற்கும், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் இரு தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுகின்றன. அவசர உதவிக்காக மருத்துவக் குழுவினரும் மெரீனா கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்படுகின்றனர். 
  பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
  கண்காணிப்பு கேமரா: இதேபோல ராட்சத பலூனில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி, அதன் மூலமும் கூட்டத்தை கண்காணிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் கூட்டத்தில் காணாமல் போகிறவர்களை கண்டுபிடித்து மீட்பதற்காக மெரீனாவில் தற்காலிகமாக 4 புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
  மேலும் கடற்கரை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகின்றன. இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை நேரலையாக எல்.இ.டி. திரைகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் காவலர்கள் கண்காணிப்பாளர்கள்.
  எலியட்ஸ் கடற்கரை: இதேபோல காணும் பொங்கலன்று எலியட்ஸ் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அடையாறு துணை ஆணையர் தலைமையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காணும் பொங்கலன்று திருட்டு, வழிப்பறி ஆகியவற்றை தடுப்பதற்காக போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
  மேலும் பாதுகாப்பு பணிக்காக அங்கு இரு தாற்காலிக புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸþடன் மருத்துவர் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுகின்றனர். கடலில் அலையில் சிக்குவோரை மீட்பதற்காக 25 மீனவர்கள் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இதேபோல கிண்டி சிறுவர் பூங்கா, கிழக்கு கடற்கரை, தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai