கவனியுங்கள்!

கவனியுங்கள்!
கவனியுங்கள்!



மனசில் பட்டதை - ஆண்டாள் பிரியதர்ஷினி; பக்.184; ரூ.180; 
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை-3.
கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளைத் தந்தையாக/ தாயாக , தோழனாக/ தோழியாக பார்ப்பது என்ன வகை? எந்த வகையிலும் சேராத பந்த வகை.
நூலாசிரியர் தான் பயணித்த கோயில்கள், சந்தித்த தெய்வங்கள், அவர்களோடு நிகழ்ந்த இதயப் பரிமாற்றங்கள் என தனது அனுபவங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். 
எவ்வளவு பக்கத்தில் கடவுளைப் பார்க்க முடியும்... எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும் என்று ஏங்குபவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

கிருஷ்ணா...கிருஷ்ணா - ப்ரியன் ஸ்ரீனிவாசன்; பக்.136; ரூ.125; கங்கை புத்தக நிலையம், சென்னை-17.
கிருஷ்ணா நதியின் நீளமான கரைகளில் உள்ள பகவானின் úக்ஷத்திரங்கள் அனந்தம். குறிப்பாக ஸ்ரீ சைலம், அமராவதி, விஜயவாடா, மங்களகிரி. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணாவைப் பாதாள கங்கை என்று சொல்கிறார்கள். 
நாள் முழுக்க மக்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள கங்கையில் மூழ்கி எழுவதால், புனித கங்கை இரவில் கருங்காகமாக மாறி விடுகிறாளாம். தன் மீது படிந்த பாவத்தைப் போக்க, கங்கையானவள் காக்கை உருவில் தினசரி கிருஷ்ணா நதிக்குப் பறந்து வந்து புனிதநீராடி, மறுநாள் காலை வெள்ளை அன்னமாக, தூய்மையாகச் செல்கிறாளாம். புராணத்தில் சொல்லப்படும் ஒரு சம்பவம் இது. நதிகளின் தாய் என்று ஸ்கந்த புராணம் கிருஷ்ணா நதியைச் சொல்கிறது. இந்த நூல் நதியின் வரலாற்றைச் சொல்வதோடு அதன் கரையில் அமர்ந்திருக்கும் கனகதுர்க்கா கோயிலைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் இந்நூல்.

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய 
மருத்துவ முறைகள்- ஜெ.ஜெயலட்சுமி; ரூ.1000; 
அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4
ஹோமியோபதி, அக்குபிரஷர், அக்குபங்சர், முத்திரை, யோகா ஆகிய எளிய மருத்துவ முறைகளைப் பற்றி நூல் அறிமுகம் செய்கிறது. சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், சிறுநீரக மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம் உள்ளிட்ட உடலின் அனைத்து உடல் உறுப்புகளைப் பற்றியும் அவற்றில் வரும் நோய்கள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. 
சர்க்கரை நோய், புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு ஹோமியோபதி, அக்குபிரஷர், அக்குபங்சர், முத்திரை, யோகா ஆகியவற்றின் மூலம் எளிய மருத்துவ முறைகளைப் பற்றி விளக்குகிறது. 
நோய்கள் வராமல் நம்மை காத்துக் கொள்ள செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், உண்ண வேண்டிய உணவுகள் பற்றியும் கூறுகிறது. சிறந்த ஆரோக்கிய கையேடு.

திருக்குறள் நாமக்கல் கவிஞர் உரை - உரையாசிரியர்: 
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை; பக்.704; ரூ.150; வ.உ.சி.
நூலகம், சென்னை-4.
திருக்குறளுக்கு இதுவரை ஏராளமான உரைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய இந்த உரையின் சிறப்பு, ஒவ்வொரு குறளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாகும். வள்ளுவர் வாய்மொழியை நன்றாகப் புரிந்துகொண்டு அவர் இன்றைய மொழிநடையில் எல்லாருக்கும் விளங்கும் வகையில் எளிமையாக இந்த உரையை வழங்கியிருக்கிறார். 
கருத்து விளக்கத்திற்காக இவர் சேர்த்துக் கொண்ட சொற்களையும், தொடர்களையும் ஆங்காங்கே அடைப்புக்குறியில் தந்திருக்கிறார். திருக்குறளின் கருத்தை விளங்கிக் கொள்ள இந்த அணுகுமுறை மிக உதவியாக இருக்கும் என்பது உறுதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com