குடியரசு தின அணிவகுப்பு: தமிழக, தில்லி வாகனங்களில் காந்தி குறித்த தகவல்! 

வரும் ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், தில்லி அரசுகள் சார்பில்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தில்லி விஜய் செளக் பகுதியில் புதன்கிழமை ஒத்திகையில் ஈடுபட்ட குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படை வீரர்கள்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தில்லி விஜய் செளக் பகுதியில் புதன்கிழமை ஒத்திகையில் ஈடுபட்ட குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படை வீரர்கள்.


வரும் ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், தில்லி அரசுகள் சார்பில் பங்கேற்கும் அலங்கார வாகன ஊர்திகளில் மகாத்மா காந்தி தொடர்புடைய காட்சிகள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அலங்கார வாகனங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் ஜனவரி 22-ஆம் தேதிக்குப் பிறகு முறைப்படி அறிவிக்கவுள்ளனர்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. தில்லி ராஜபாதையில் நடைபெற உள்ள இவ்விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்பது மரபாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் தில்லி ராஜபாதையில் நடைபெற உள்ள அலங்கார அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன. இதில், தமிழ்நாடு, தில்லி சார்பில் பங்கேற்கும் வாகனங்களில் மகாத்மா காந்தி குறித்த தகவல்கள் இடம்பெற உள்ளன. 
தமிழ்நாட்டுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அவர் பலமுறை தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். மேலும், மதுரையில் அவர் தங்கியிருந்த போது அரை ஆடைக்கு மாறினார். 
இது போன்று பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் காந்தியின் வருகையின் போது நிகழ்ந்துள்ளன. அதை வெளிப்படுத்தும் தகவல்கள் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார வாகனத்தில்இடம் பெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு சார்பிலான அலங்கார வாகனப் பணி தமிழகத்தின் செய்தி- மக்கள் தொடர்புத் துறை உயர் அதிகாரி சங்கர் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி சார்பில்...: தில்லி சார்பில் பங்கேற்கும் வாகனத்திலும் மகாத்மா காந்திக்கும் தில்லிக்கும் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தும் காட்சிப் பதிவுகள் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மகாத்மா காந்தி தில்லியில் 720 நாள்கள் தங்கியிருந்தார். தனது கடைசிக் காலத்தில் 144 நாள்கள் தில்லியில் உள்ள பிர்லா ஹவுசில் அவர் தங்கியிருந்தார். 1919 முதல் 1948 வரையிலும் பல்வேறு தருணங்களில் அவர் தில்லிக்கு வந்துள்ளார். 
1921-ஆம் ஆண்டு டிப்பியா கல்லூரியைத் தொடங்கிவைத்துள்ளார். வால்மீகி பஸ்தி குடியிருப்புவாசிகளுக்கான பணிகளையும் மேற்கொண்டார். அவற்றை நினைவுகூரும் வகையில் அலங்கார வாகனத்தில் காட்சிகள் இடம் பெறவுள்ளன என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com