தமிழர்கள் தமிழை இழந்துவிடக் கூடாது!

 உலகத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை இழந்துவிடக் கூடாது என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கேட்டுக் கொண்டார்.
தமிழர்கள் தமிழை இழந்துவிடக் கூடாது!


 உலகத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை இழந்துவிடக் கூடாது என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கேட்டுக் கொண்டார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் புதன்கிழமை நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
தாய்மொழி ஒருவருக்கு கண் போன்றது. தாய்மொழியை ஒருவர் இழந்துவிட்டால் கண்களை அவர் இழந்துவிட்டதைப் போல என்பதால்தான் நான் இந்த கண்களை இழக்கும் தமிழர்கள் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை. சிறிது சிறிதாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பல தமிழர்களின் வீடுகளில் தமிழில் பேசுவதில்லை. குழந்தைகளைத் தமிழ் வழிக் கல்வியில் நாம் படிக்க வைப்பதில்லை. தமிழ் படிக்கத் தெரியாத குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள். தெருவில் இறங்கிச் சென்றால் நீங்கள் உணவகத்தைப் பார்க்க முடியாது. ரெஸ்டாரண்டைத்தான் பார்க்க முடியும். மருந்துக் கடைகளைப் பார்க்க முடியாது. மெடிக்கல் ஸ்டோரைத்தான் பார்க்க முடியும். இப்படி தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருக்கும் கடையானாலும் அதன் பெயரைத் தமிழில் பார்க்க முடியாது. ஆனால் பெயர்ப் பலகையில் தமிழ் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதை யாரும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. 
ஒரு நிமிடம் பிற மொழிக் கலப்பில்லாமல் நம்மால் பேச முடியாது. 
வீட்டில் குழந்தைகளைத் தமிழில் பேசும்படி நாம் வற்புறுத்துவதில்லை. ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என்று நினைக்கிறோம். சில பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனைகூட உண்டு. 
வேலைக்குப் போவதற்காகவே குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். குழந்தைகளை அறிவாளியாக்க நாம் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதனால் பள்ளிகளில் தமிழுக்கு மரியாதை இல்லை. 
வங்கிகளுக்குச் சென்றால் அங்குள்ள பல படிவங்களில் தமிழ் இல்லை. இந்தியோ, ஆங்கிலமோதான் உள்ளது. இந்நிலையில் தமிழ்மட்டும் தெரிந்த ஒருவர் வங்கியில் பணம் எடுக்கவோ, போடவோ உள்ள படிவங்களை அடுத்தவர் உதவியுடன்தான் நிரப்ப வேண்டும். 
ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப்படுகிறது. ஹாட் மச்சி, ஹாய் மச்சி, என்ன லுக் விடுற? என்பன போன்ற உரையாடல்கள் சர்வசாதாரணம். விமானத்தில் ஏறி சேலத்துக்குச் சென்றாலும், விமானத்தில் உள்ள பணிப்பெண் உங்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தமிழில் பேச மாட்டார்.
ஆனால் தமிழர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. கர்நாடக மாநிலத்தில் பெயர் பலகைகள் கன்னடத்தில் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கூட ஜெர்மன், பிரான்சு ஆகிய நாடுகளில் அந்த நாட்டு மொழிகளில்தான் கடைகளின் பெயர்களைப் பார்க்க முடிகிறது. எனவே தமிழர்களாகிய நாம் தாய்மொழியான நமது கண்களை இழந்து வருகிறோம். 
பிறந்த நாள் முதலாய் நமது தாய் நமக்கு சொல்லிக் கொடுத்த மொழி தமிழ். தமிழ் மூலமாகத்தான் நாம் உலகைப் புரிந்து கொள்கிறோம். அதன் மூலமாகத் தான் நாம் முன்னேற முடியும். முன்னேற வேண்டும். நம் முன்னோர்களின் அறிவை இளம்தலைமுறையினருக்குக் கடத்திச் செல்ல தமிழே சிறந்த வாகனம் என்பதை நாம் உணர வேண்டும் என்றார். 
கூட்டத்தில் கவிஞர் ஜானிசிவம் பேசியதாவது: கடவுள் என்றால் கட + உள் என்று புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் எல்லாப் பொருள்களிலும் புகுந்து வியாபித்து உள்ளார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் என்ற சொல்லை கடந்து உள்ளே போவது என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். உள்ளத்தைக் கடப்பது கடவுள். நாத்திகம், ஆத்திகம் ஆகிய இரண்டையும் கடந்தது ஆன்மிகம். 
எல்லா உயிர்களும் ஒரே பொருளில் செய்யப்பட்டிருப்பது என்று நம்புவது ஆன்மிகம். அதனால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆன்மிகம் சொல்கிறது.
எங்கும் வியாபித்து இருப்பதே கடவுள். நாத்திகவாதியோ, ஆத்திகவாதியோ இருவருமே இந்த வியாபித்து இருக்கும் பொருளை ஒப்புக் கொள்வார்கள். காற்றுதான் எங்கும் வியாபித்திருப்பது. காற்றில் மூழ்கி நாம் உயிர் வாழ்கிறோம். நமது உடலுக்குள் காற்று போய் வெளியே வந்து கொண்டிருக்கிறது. காற்றுதான் எல்லா உயிரினங்களும் தவிர்க்க முடியாத உணவு. எனவே காற்றைக் கடவுள் என்று சொல்லலாம். காற்று உடலுக்குள் சென்று கெட்டதை நீக்கி விடுகிறது. சுவாசிப்பின் மூலம் அதையே நாம் செய்கிறோம். வாசிப்பும் அதேபோல்தான். நல்ல புத்தகங்களை நீங்கள் வாசித்தீர்கள் என்றால் உங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் வெளியேறிவிடும். நல்ல எண்ணங்கள் உள்ளத்திற்குள் புகுந்துவிடும். எனவே ஒருவகையில் பார்த்தால் வாசிப்பும் சுவாசிப்பும் ஒன்றே என்றார்.
மனித வாழ்க்கையில் அதிசயம் என்ற தலைப்பில் ஜே.ஞானகுரு பேசினார். பபாசி பொருளாளர் டி.எஸ்.ஸ்ரீநிவாசன் வரவேற்புரை ஆற்றினார். பி.பார்த்தசாரதி நன்றியுரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com