விரைவில் புதிய தேர்வு நடைமுறை: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் புதிய தேர்வு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் புதிய தேர்வு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
மாணவர்கள் தேர்ச்சி பெறாத தேர்வுகளுக்கான விதிமுறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இதைத் தொடர்ந்து நிபுணர் குழு அமைத்து மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்தார்.  இதை ஏற்றுக் கொண்டு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். 
ஆனால், அதன்பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா,  மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை மட்டுமே ஏற்க முடியும். தேர்வு முறையில் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டது.
 இந்த நிலையில் விரைவில் புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: 
கடந்த 2017-ஆம் ஆண்டின் புதிய  நடைமுறைகள் தொடர்பான மாணவர்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்விக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
 எனவே, மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என துணைவேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com